ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு: தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்து பாஜக-வில் இணைய சச்சின் பைலட் திட்டமா?....அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட் பாரதிய ஜனதாவில் இணையப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் முகாமிட்டுள்ள சச்சின் பைலட்டுடன் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அதிருப்தியாளர்கள், சுயேட்சைகள் என மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் முதலே பாரதிய ஜனதாவுடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் சச்சின் பைலட், பாரதிய ஜனதா தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து இன்று அக்கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சச்சினுடன் டெல்லி சென்ற அதிருப்தி எம்.ஏல்.ஏக்கள் 3 பேர் திடீரென பல்டி அடித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோகித் போரா தெரிவித்ததாவது, தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்றோம். நாங்கள் இதற்காக சென்றோம், அதற்காக சென்றோம் என்று ஊடகங்கள் கூறுவது எங்கள் பிரச்சனையல்ல. எந்தவொரு சிக்கலிலும் சிக்க விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியின் போர் வீரர்களான நாங்கள் கடைசி மூச்சு உள்ளவரை காங்கிரசிலேயே இருப்போம் என தெரிவித்துள்ளார்.

அசோக் கெலாட் அரசில் துணை முதல்வராக பதவி வகிக்கும் சச்சின் பைலட் பாரதிய ஜனதாவில் சேர தம்மை முதல்வராக்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சச்சின் பைலட்டை சந்திக்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் சச்சின் பைலட் அடுத்தகட்டமாக எந்த நடவடிக்கை எடுக்க போகிறார் என்று ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories:

>