×

பெரியபாளையம் அருகே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அடுத்த மாளந்தூர் கிராமத்தில் அரசு, தனியார் கம்பெனி ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகாமையில் இரண்டு மின்சார  டிரான்ஸ்பார்மர்கள் அருகருகில் அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த வழியாக  பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களும் பழுதடைந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மரை தாண்டித்தான் செல்லவேண்டும். மேலும், இந்த டிரான்ஸ்பார்மர் உள்ள இடம் மிகவும் தாழ்வாக உள்ளதால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி எளிதில் மக்கள் மீது மின்சாரம் பாயும் நிலை உள்ளது. இதுகுறித்து பல முறை மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் புகார் தெரித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாளந்தூர் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

உயர்மின் அழுத்த கம்பிகள் அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக வீடுகளுக்கு மேல் செல்வதை மாற்றி தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த வருடம் அக்டோபர் மாதம்  பழுதடைந்த மின்சார டிரான்ஸ்பார்மருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடந்தது. தகவலறிந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய உதவிப்பொறியாளர் குமரகுரு சம்பவ இடத்திற்கு வந்தார். அப்போது, அவரிடம்,  அருகில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும். எனவே இந்த டிரான்ஸ்பார்மர்களை வேறு இடத்தில் மாற்றி வைக்க வேண்டும் என கூறினர்.

இதை கேட்ட மின்வாரிய அதிகாரி, உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால், 9 மாதங்கள் ஆகியும் இதுவரை டிரான்ஸ்பார்மர் மாற்றவில்லை. இந்நிலையில், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும்  கிராம மக்கள் இணைந்து டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, மக்கள் கூறும்போது, “டிரான்ஸ்பார்மர் மாற்றக்கோரி பல போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நாளை திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுக்கவுள்ளோம்” என கூறினர்.

Tags : demonstration ,Periyapalayam , Periyapalayam, faulty, transformer, change, public, demonstration
× RELATED பெரியபாளையம் காவல் நிலையத்தில்...