தெலங்கானா அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை ஆட்டோவில் எடுத்து சென்ற அவலம்

திருமலை: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த 50 வயது ஆண் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் உடல் மருத்துவமனையின் மேற்பார்வை இல்லாமல் இறுதி சடங்கு செய்யும் இடத்திற்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டது. மேலும், உரிய உடல் கவசம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் இல்லாமல் ஆட்டோ டிரைவர் எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து நிஜாமாபாத் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நாகேஷ்வர் ராவ் கூறியதாவது: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 50 வயது ஆண் கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர் ஒருவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் இறந்தவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர் 108 ஆம்புலன்சிற்காக காத்திருக்காமல் ஆட்டோவில் சடலத்தை எடுத்து சென்றார். இவ்வாறு அவர் கூறினார். மருத்துவமனை நிர்வாகம் இதை எப்படி அனுமதித்தது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

* சோதனைகள் குறைவு

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில், ‘‘மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தெலங்கானாவில் கொரோனா சோதனைகள் குறைவாக உள்ளன. டெல்லி, மும்பை, சென்னைக்கு அடுத்தபடியாக ஐதராபாத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ளது,’’ என்றார்.

Related Stories:

>