×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர்நிலைகளை தூர்வார ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீர்நிலைகளை தூர்வாரும் பணிக்கு ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் முதல் தூர்வாரும் பணிகளை தொடங்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வேண்டும்.

அப்போது, தான் மழை காலங்களில் கால்வாய் வழியாக எளிதில் மழை நீர் கடலுக்கு செல்ல ஏதுவாக இருக்கும். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்களை தூர்வாருவதற்காக பொதுப்பணித்துறை சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி நிதித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 3 பணிக்கு ரூ.2.50 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 2 பணிக்கு ரூ.2 கோடி, ஆரணியாறு கோட்ட வடிநிலத்தில் 3 பணிக்கு ரூ.2 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்ட கோட்டத்தில் 1 பணிக்கு ரூ.40 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 2 பணிக்கு ரூ.1 கோடி, சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 3 பணிக்கு ரூ.2 கோடி என மொத்தம் 14 பணிக்கு ரூ.9.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆகஸ்ட் முதல்வாரத்தில் இருந்து கால்வாய்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* கூடுதல் நிதி ஒதுக்கீடா?
கடந்தாண்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 9 பணிக்கு ரூ.1.85 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 10 பணிக்கு ரூ.1.78 கோடி, ஆரணியாறு கோட்ட வடிலத்தில் 10 பணிக்கு ரூ.1.76 கோடி, கிருஷ்ணா நீர்விநியோக திட்டகோட்டத்தில் 6 பணிக்கு ரூ.24 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 6 பணிக்கு ரூ.47 லட்சம், சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 10 பணிக்கு ரூ.1.55 கோடி என மொத்தம் பேக்கேஜ் அடிப்படையில் 51 பணிக்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடப்பாண்டில் 14 பணிகள் தான் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ரூ.9.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : water bodies , Northeast Monsoon, Precautions, Hydro, Rainfall Rs 10 crore
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு அதிகம்...