×

பொது இட ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்ட விவகாரம் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் கைது

சென்னை: திருப்போரூர் அருகே பொதுஇடத்தில் பாதை அமைப்பதை தட்டி கேட்ட விவகாரத்தில் திருப்போரூர் எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சுமார் 100 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளது. இந்த நிலத்திற்கு வழி இல்லாததால் கிராமத்திற்கு சொந்தமான பொதுநிலம் மற்றும் கால்வாயை ஆக்கிரமித்து சாலை அமைக்க ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் முயற்சி செய்தனர்.

இதற்கு அதே ஊரை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் செங்காடு கிராமத்தை சேர்ந்த திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மனிடம் தகவல் தெரிவித்தனர். அவரும், இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஆட்சேபனை மனு அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சார்பில் சாலை அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரங்களுடன் ஒரு கும்பல் வந்தது. இதற்கு அதே ஊரை சேர்ந்த குருநாதன் (45) என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை சென்னையில் இருந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரால் அழைத்து வரப்பட்ட ரவுடிகள் சரமாரியாக தாக்கினர். இவரது அலறல் சத்தத்தை கேட்டு கிராம மக்கள் திரண்டனர்.

திருப்போரூர் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தையுமான லட்சுமிபதி (70), அங்கு சென்று தாக்கப்பட்ட குருநாதன் என்பவரை மீட்டார். அப்போது, ரவுடி கும்பல் லட்சுமிபதி மீதும் அவருடன் வந்த மனோகரன் (55), மீதும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ரவுடிகளை விரட்ட லட்சுமிபதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் ஒன்று சேர்ந்ததால் அந்தக் கும்பல் தப்பியோடியது. இச்சம்பவத்தில், மேலும் ரியல் எஸ்டேட்  நிறுவனத்தை சேர்ந்த குமார் (35) என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு தரப்பினர்  மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏடிஜிபி ஜெயந்த் முரளி, ஐ.ஜி.சந்தோஷ்குமார் (பொறுப்பு) காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமூண்டீஸ்வரி, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் திருப்போரூர் காவல் நிலையத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
 
அதன் பிறகு எஸ்.பி கண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இரு தரப்புக்குமிடையே  நடந்த மோதல் தொடர்பாக புகார்கள் தரப்பட்டுள்ளது. மற்றொரு தனிநபரான சீனிவாசன் என்பவரும் ஒரு புகார் கொடுத்துள்ளார். மொத்தம் 3 புகார்கள் மீதும் முறையான விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சம்பவம் தொடர்பாக 2 துப்பாக்கி மற்றும் 4 பைக்குகள், 1 டிராக்டர், 1 பொக்லைன் இயந்திரம்  ஆகியவை கைப்பற்றியுள்ளோம். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 4 டிஎஸ்பி 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து  நேற்று பிற்பகல் தனிப்படை போலீசார் சென்னை மேடவாக்கத்தில் வைத்து எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்து, திருப்போரூர் அழைத்து வராமல் நேராக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு தொடர்ந்து பல மணி நேரம் எம்எல்ஏவிடம் விசாரணை மேற்கொண்டனர். எம்எல்ஏ இதயவர்மனிடம் நடந்த 5 மணி நேர விசாரணைக்கு பிறகு செங்கல்பட்டு முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்திரவிட்டார். அதன்பின்பு சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கனகராஜ் நேற்று திருப்போரூர் எம்எல்ஏவை சந்தித்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இது திட்டமிட்ட பொய் வழக்கு. அவரை வீட்டில் இருந்து போலீசார் அழைத்து சென்றனர். ஆனால், தலைமறைவானவரை கைது செய்ததாக போலீசார் கூறுகின்றனர்’’ என்றார்.

* திமுகவினர் புடை சூழ திருமணம்...
100 ஏக்கர் நிலத்தை வளைத்த இமயம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் குமார் (35), செங்காடு கிராமத்தை சேர்ந்தவர். சென்னையில் நடைபெற்ற இவரது திருமணத்திற்கு தமிழக அமைச்சர்கள் புடை சூழ வந்தனர்.இவரது சகோதரர் தாண்டவமூர்த்தி திருமணம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தலைமையில்தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தாண்டவமூர்த்தியின் மாமனார் ஏகாம்பரம் சிறுதாவூர் பங்களாவின் பொறுப்பாளாக இருக்கிறார். அந்த அளவிற்கு அரசியல் பின்புலம் உள்ளவர். தாண்டவமூர்த்தி போயஸ் கார்டன் வீட்டிற்கு நேரடியாக செல்லக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thiruporur MLA Ithayavarman ,space , Public space, occupation, affairs, arrests
× RELATED கொரோனா என்ன செய்துன்னு பாத்துரலாம்..!!...