×

முழு ஊரடங்கின் போது மருந்து வாங்கச் சென்றவர் போலீசார் பைக்கை பறித்ததால் நடுரோட்டில் வாலிபர் தீக்குளிப்பு: ஆம்பூரில் பயங்கரம்

ஆம்பூர்: முழு ஊரடங்கு வாகன சோதனையின்போது போலீசார் பைக்கை பறித்ததால் விரக்தியடைந்த வாலிபர், ஆம்பூர் நெடுஞ்சாலையில்  உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து அங்குமிங்கும் அலறியபடி ஓடி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததால் இம்மாதம் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, முழு ஊரடங்கான நேற்று இருசக்கர வாகனத்தில் தேவையின்றி சாலையில் சுற்றி வருபவர்களை கண்காணித்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர்.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை மஸ்ரூல் உலூம் கல்லூரி அருகில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 2 மணியளவில் அந்த வழியாக பைக்கில் 12 வயது சிறுவனுடன் வந்த வாலிபர் ஒருவரை மடக்கி பிடித்த போலீசார், ‘ஊரடங்கு நேரத்தில் ஏன் பைக்கில் வலம் வருகிறீர்கள்?’ என்று கேட்டனர். பின்னர் பைக்கை பறித்து சாவியை எடுத்து வைத்துக் கொண்டார்களாம்.
அப்போது அந்த வாலிபர், ‘நான் மருந்து வாங்க வந்தேன். வேறு எதற்காகவும் வரவில்லை. எனது பைக்கை திருப்பித்தாருங்கள். உங்கள் காலில் கூட விழுகிறேன்’ என்று கேட்டுள்ளார். அதற்கு போலீசார் மறுத்து வழக்குப்பதிவு செய்யப்போவதாக கூறியதாக தெரிகிறது. இதனால் அந்த வாலிபர் அங்கிருந்தே சிலருக்கு போன் செய்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் போலீசாரிடம் பைக்கை தரும்படி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் கண்டுகொள்ளாததால், ‘நீங்கள் பைக்கை தராவிட்டால் நான் தீக்குளித்துவிடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். அதை பொருட்படுத்தாத போலீசார், தங்கள் பணியை தொடர்ந்து செய்து வந்தனர். திடீரென அந்த வாலிபர், தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகி, பைக்கில் ஒரு லிட்டர் வாட்டர் பாட்டிலில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார்.

இதில் உடலில் பரவிய தீயுடன் ‘நான் தீக்குளித்ததற்கு போலீசார் தான் காரணம்’ என்று சத்தம் போட்டுக் கொண்டே அங்குமிங்கும் அலறியபடி  ஓடியநிலையில் கீழே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து போர்வைகளால் சுற்றி  தீயை அணைத்து ஆபத்தான நிலையில் இருந்த அந்த வாலிபரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வேலூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அந்த வாலிபர் குறித்து உடன் வந்த உறவினர் மகனான அஜித் என்ற சிறுவனிடம் விசாரித்த போது, அவர் ஆம்பூர் அண்ணா நகர், புதுக்காலனியை சேர்ந்த மூர்த்தி மகன் முகிலன் (27) என்பதும், ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் வேலை செய்வதும், அவருக்கு லீலாவதி (22) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருப்பதும் தெரிந்தது.

தகவல் அறிந்த டிஐஜி காமினி, எஸ்பி விஜயகுமார் ஆகியோர் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக ஆம்பூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர். மேலும், வேலூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று முகிலனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர். அங்கு திரண்டிருந்த முகிலனின் உறவினர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.ஐ.ஜி. காமினி, எஸ்.பி. விஜயகுமார் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். 5 போலீசார் அதிரடி மாற்றம்: இந்நிலையில் சம்பவம் நடந்தபோது அங்கு இருந்த 5 போலீசார் திருப்பத்தூர் தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டதாக எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார்.

* 108 ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பிய போலீசார்
தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர் முகிலன் தீக்குளித்த சமயத்தில் அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை டிரைவர் நிறுத்தினார். ஆனால் போலீசார் அவரை பார்த்து வண்டியை எடு, எடு என்று சத்தம் போட்டு மிரட்டி அனுப்பியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். தீ அணைக்கப்பட்ட பிறகு போலீசார் சில நிமிடங்கள் கழித்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்து முகிலனை ஏற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : rally ,protesters ,curfew , Full curfew, drug, cops bike, plaintiff, firebrand
× RELATED மாவட்ட நீதிமன்றம் சார்பில் சமரசம் குறித்த விழிப்புணர்வு பேரணி