×

வெயிலில் பரவாது என்பதை பொய்யாக்கியது கொரோனா: மழைக்காலத்தில் மாஸ்க் அவசியமா?

சென்னை: பருவ மழைக்காலங்களில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிவது முக்கியமா என்பது குறித்து மருத்துவ நிபுணர் பூபதி ஜான் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றி ஆரம்பத்தில் பல்வேறு தகவல்கள் வெளியானது. அதில் ஒன்றாக கோடை காலத்தில் கொரோனா பரவாது என கூறப்பட்டது. ஆனால், கடும் வெயில் வாட்டி வைத்த காலத்தில்தான் தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். தற்போது வெயில் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் மழை அதிகமாக இருக்கும். அப்போது, மாஸ்க் நனைந்து அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். நனைந்த மாஸ்க்கை பயன்படுத்தவும் மக்கள் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது மற்றும் அறுவை சிகிச்சை நிபுணரும், இந்திய மருத்துவ சங்க செயலாளருமான கோடம்பாக்கம் பூபதி ஜான் கூறியதாவது:
கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழையும் போது இந்த வைரஸ் தட்பவெப்பநிலை குறைவாக உள்ள பகுதிகளில் அதிகமாக பரவும் எனவும், தமிழகத்தில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் பரவாது எனவும் கூறப்பட்டது. ஆனால், இதை கொரோனா முழுவதுமாக பொய்யாக்கிவிட்டது. வெயில் காலங்களில், அதாவது கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 1.30 லட்சத்தையும் தாண்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இனிவரக்கூடிய காலக்கட்டமான மழைக்காலத்தில் கொரோனா பரவலை கண்டிப்பாக நாம் தடுக்க முடியாது.

கொரோனா வைரஸ் 60 டிகிரி வெப்பநிலைக்கு மேல் இருந்தால் அது தன்னுடைய வீரியத்தை இழக்கும். எனவே, வரக்கூடிய மழை காலத்தில் வெயிலின் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கும். இது அரசுக்கும் சரி, மருத்துவர்களுக்கும் சரி பெரும் சவாலை ஏற்படுத்தும். இதேபோல், மழைக்காலங்களில் முகக்கவசம் அணிவது எந்த வகையில் சாத்தியமாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஈரமான முகக்கவசத்தை அணிந்தால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்று பலரும் கேட்டு வருகின்றனர்.

தற்போது உள்ள கொரோனா பரவலில் மழைக்காலத்திலும் நாம் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசத்தை கட்டாயம் அணிந்தால் மட்டுமே நாம் 80 சதவீதம் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். முகக்கவசத்தை பொறுத்தவரையில் மழைக்காலங்களில், நீண்ட நாள் நோயாளிகள், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் சர்ஜிக்கல் மாஸ்க் என்று கூறப்படும் 3 அடுக்கு முகக்கவசத்தை பயன்படுத்தலாம். மருத்துவர்கள், செவிலியர்கள் என்-99 மாஸ்க் பயன்படுத்தலாம்.  இதைதவிர பொதுமக்கள் காட்டன் துணியால் செய்யப்பட்ட மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.

பொதுமக்கள் மழை காலங்களில் வெளியே செல்லும் போது குறைந்தது இரண்டு அல்லது மூன்று முகக்கவசத்தை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். செல்போன் இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியாதோ, அதேபோல் இனி முகக்கவசம் என்பது கட்டாயமான ஒன்றாக இருக்க வேண்டும். மழையால் முகத்தில் அணிந்துள்ள மாஸ்க் நனைந்தால் அடுத்ததாக ஒரு மாஸ்க்கை பயன்படுத்தும் வகையில் தயாராக இருக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு சென்று அதை சுடு தண்ணீரில் போட வேண்டும். அதை எடுத்து காய வைத்தாலே போதும். எந்தவிதமான வைரஸ் தாக்கமும் நமக்கு ஏற்படாது.

வரக்கூடிய காலக்கட்டத்தில், டெங்கு, மலேரியா போன்ற பெரும் தொற்றுகள் வர வாய்ப்புள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் நீண்ட நாள் நோயாளிகள் வீட்டில் இருந்து வெளியே வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மழையில் நனையாமல் இருக்கவும் குடைகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைக்க வேண்டும். மழைக்காலத்திலும் கொரோனா பரவலை தடுப்பதற்கு இதை நாம் செய்வது மட்டுமே ஒரேவழி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,season , Does the sun spread, lie, corona, mask necessary?
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...