ரூ10க்கு உணவு அளித்த ‘ராமு தாத்தா’ மரணம்

மதுரை: மதுரை, அண்ணா பஸ் நிலையம் அருகே 52 ஆண்டுகளாக மெஸ் நடத்தி வந்தவர் ராமு (90). இதனருகே மதுரை அரசு மருத்துவமனை விரிவாக்கக் கட்டிடம் உள்ளது. மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் பலருக்கும் இந்த உணவகம் உதவிகரமாக இருந்தது. தனது மனைவி பூர்ணத்தம்மாளுடன் சேர்ந்து ஏழைகளுக்கு வயிறாற ரூ.10க்கு உணவளித்து வந்தார். இவரது மனைவி சமீபத்தில் இறந்தார். மதுரை அருகே திருமங்கலம் வில்லூரைச் சேர்ந்த இவர்கள் 1967ல் இப்பகுதிக்கு குடியேறினர். அப்போது ஒன்னேகால் ரூபாய்க்கு சாப்பாடு வழங்க தொடங்கி, 1975ல் ரூ.1.50க்கும், 1980ல் ரூ3க்கும், 2014ல் ரூ.5க்கும் சாப்பாடு வழங்கி வந்தனர்.

விலைவாசி உயர்வால் ரூ.10க்கு சாப்பாடு மற்றும் தோசை, வெண்பொங்கல் வழங்கி ஏழை, ஏளிய மக்களின் வயிற்றுப்பசியை தீர்த்து வந்தார். இதனால் ‘ராமு தாத்தா’ என அன்போடு அழைக்கப்பட்டார். இவரது சேவையைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருது, நன்கொடைகள் வழங்கின. வயது முதிர்வு காரணமாக கடந்த சில மாதங்களாக  உடல்நலக்குறைவால் இருந்து வந்த ராமு தாத்தா நேற்று காலை மரணமடைந்தார். கொரோனா காலத்திலும் இவரது இறப்பு பற்றி அறிந்த மதுரை மக்கள் இங்கு சமூக இடைவெளியுடன் சென்று பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: