×

கேரளா தங்க கடத்தல் வழக்கில் தேடப்படும் ஸ்வப்னா கூட்டாளி ஃபாசில் பரீத் துபாயில் பதுங்கல்!!!

துபாய்: கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் தேடப்படும் ஸ்வப்னா கூட்டாளி ஃபாசில் பரீத் துபாயில் பதுங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விஷயமாக மாறியுள்ளது தங்க ராணி ஸ்வப்னாவின் வழக்கு. வெளிநாட்டிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரங்கம் பெயரில் தங்கம் கடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சுங்கத்துறை, அமலாக்கத்துறை மற்றும் என்.ஐ.ஏ உள்ளிட்ட 3 துறையினரும் தனித்தனியாக 3 வழக்குகளை ஸ்வப்னாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளன.

இதில் என்.ஐ.ஏ பதிவு செய்த வழக்கில்தான் நேற்றைய தினம் பெங்களூரில் பதுங்கி இருந்த ஸ்வப்னா மற்றும் அவரது கூட்டாளியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து கொச்சிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்த வழக்கை பொறுத்தவரையில், சுங்க துறையினர் பதிவு செய்துள்ள முதல் வழக்கில் 4 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் முதல் நபர் ஸ்வப்னா, 2வது நபர் சரீத், 3வது நபர் சந்தீப் நாயர் மற்றும் 4வதாக ஃபாசில் பரீத் என்பவரும் உள்ளனர்.  தற்போது, சரீத், சந்தீப் மற்றும் ஸ்வப்னா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஃபாசில் பரீத் என்பவரை மட்டும் கைது செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே அவரை பற்றி விசாரணை மேற்கொண்டபோது தற்போது ஃபாசில் பரீத் துபாயில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

துபாயில் ஃபாசில் பரீத் தற்போது பெரிய தொழிலதிபர் போல நடந்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும், துபாயில் ஆடபரமாக உடற்பயிற்சி மையத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, ஃபாசில் துபாயில் ஆரம்பத்தில் சிறிய தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. எனவே இந்த வழக்கில் ஃபாசில் பரீத்தை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஃபாசில் பரீத் துபாயில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒப்படைக்குமாறு என்.ஐ.ஏ அதிகாரிகளும், இதர விசாரணை அமைப்பினரும் துபாய் அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, ஃபாசில் பரீத்தை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள்தான் தற்போது நடைபெற்று வருவதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags : Swapna ,Fasil Pareed ,Dubai ,Fazil Pareeth ,Kerala , Kerala, Gold Smuggling, Swapna, Fossil Pareeth, Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...