×

திராவிட இயக்கச் சிந்தனையில் இறுதிவரை இயங்கிய இன்பத்தமிழ்க் கருவூலம் நாவலர்: மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: திராவிட இயக்கச் சிந்தனையில் இறுதிவரை இயங்கிய இன்பத்தமிழ்க் கருவூலம் நாவலர் என்று மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: வரலாற்றில் இழந்த உரிமைகளை, வாழ்நாள் போராட்டங்களின் வழியாக மீட்டெடுத்து புதிய வரலாறு படைத்த திராவிட இயக்கத்தில் தனி முத்திரை பதித்தவர் நடமாடும் பல்கலைக்கழகம் எனப் போற்றப்பட்ட நாவலர். திராவிடர் கழகம் தொடங்கப்படுவதற்கு முன்பே திராவிட மாணவர் கழகம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அது கிளை பரப்பியது. 1944-ம் ஆண்டு அதன் மாநில மாநாடு கும்பகோணத்தில் நடந்தபோது, அதில் பங்கேற்று எழுச்சியும் உணர்ச்சியும் மிகு உரையாற்றியவர் நாவலர்.

அதே காலகட்டத்தில்தான், பள்ளி மாணவராகக் கையில் தமிழ்க்கொடி ஏந்தி இந்திக்கு எதிராக முழங்கி வந்த முத்தமிழறிஞர் கலைஞர், திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் ஆண்டுவிழாவில், கலைஞரின் அன்பான அழைப்பின் பேரில் பங்கேற்று உரையாற்றிச் சிறப்பித்தவர் நாவலர். 1949-ல் தொடங்கப்பட்ட திமுகவின் வலிமை மிகுந்த தூண்களில் ஒருவராக விளங்கியவர் நாவலர். மும்முனைப் போராட்டம் தொடங்கி கழகம் நடத்திய போராட்டங்களில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பக்கபலமாக இருந்த நாவலர். 1962-ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். 1967 தேர்தலில் திமுக மகத்தான  வெற்றி பெற்று, முதன்முதலாக ஆட்சி அமைத்தபோது, பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் நாவலர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

தலைவர் கலைஞர் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத்துறைகளுக்கு அமைச்சரானார். காலம் கருணையின்றி பேரறிஞர் அண்ணாவை 1969-ல் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டபோது, கழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சம் நிலவியது. கட்சிக்கும் ஆட்சிக்கும் தனிச் சிறப்பான தலைமை தேவைப்பட்டது. கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலைஞரை முன்னிறுத்தினர். இடைக்கால முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த நாவலர் மனவருத்தம் கொண்டிருந்த அந்தச் சூழலில், கழகத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்ற உணர்வுடன் தலைவர் கலைஞரும் மற்றவர்களும் மேற்கொண்ட முயற்சிகள், நாவலரின் எண்ண அலைகள் அனைத்தும் நெஞ்சுக்கு நீதியில் தலைவர் கலைஞரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, கழகத்தின் தலைவராகக் கலைஞர், பொதுச் செயலாளராக நாவலர், பொருளாளராக எம்.ஜி.ஆர். ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு, கழகம் எனும் பேரியக்கம் தொடர்ந்து பெரும் வளர்ச்சி காண்பதற்கு வழிவகுக்கப்பட்டது. பின்னர், தலைவர் கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்ற நாவலர், இந்தியாவின் முன்னோடித் திட்டங்கள் பலவற்றைத் தலைவர் கலைஞரின் ஆட்சி நிறைவேற்றியபோது, அதற்குத் துணை நின்றவர். நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் நிலைமைகளால், நாவலர் அவர்கள் தனி இயக்கம் கண்டு, பின்னர் மாற்று முகாமில் இணைந்தபோதும், திராவிட இயக்கக் கொள்கைகளைக் கைவிடாமல் காப்பாற்றியவர்.

2000-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் நாவலர் இயற்கை எய்தியதை அறிந்து வேதனையுற்ற கழகத் தலைவரும் அன்றைய தமிழக முதல்வருமான கலைஞர் நேரடியாகச் சென்று, தன் கொள்கைச் சகோதரருக்கு இறுதி வணக்கம் செலுத்தினார். தலைவர் கலைஞர் வளர்த்துக் காத்த அரசியல் நாகரிகமும், திராவிட இயக்க வரலாற்றில் தனக்கெனத் தகுதிமிக்கதோர்  இடமும் கொண்ட நாவலர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை திமுக வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம் என்ற உறவிலும் உரிமையிலும், சிறப்புடன் கொண்டாடி மகிழ்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : treasury novelist ,end ,MK Stalin ,Inpathamilk ,Dravidian , Dravidian Movement Thought, Inpathamilk Treasury Novelist, MK Stalin, Praise
× RELATED கோடைகால நோய்கள்…