×

மத்திய அரசு உத்தரவுப்படி செப்டம்பரில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாது

* தேர்வு நடத்துவதை மாநில அரசிடம் விட வேண்டும்
* மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மத்திய அரசு உத்தரவின்படி செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடந்த இயலாது என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் தேர்வுகள் நடத்த இயலாது என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பெக்ரியாலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க எனது அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு பல்வேறு முறைகளை ஒருங்கிணைத்து சிகிச்சை வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 49 சதவீதமாக உள்ளது. இதன் பயனாக அதிக அளவிலான மாணவர்கள் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இவற்றில் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு கொரோனா பாதிப்பு காரணமாக நடத்த முடியவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு வருவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

பல மாணவர்கள் வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசித்துவருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் முறையில் நடத்த முடியாத சூழ்நிலையும் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல உயர்கல்வி நிறுவனங்களில் ெகாரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எனவே செப்டம்பர் மாதத்தில் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்க வேண்டும். செப்டம்பரில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

40 மீனவர்களை மீட்க வேண்டும்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது : ஈரானில் தவித்து வரும் தமிழக மீனவர்களை மீட்க கோரி 19.05.2020 அன்று எழுதிய கடிதத்தை நினைவுப்படுத்த விரும்புகிறேன். அதன்படி, ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் தமிழக மீனவர்கள் 681 பேர் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் இன்னும் தமிழக மீனவர்கள்40 பேர், ஈரானிலேயே தவித்து வருகின்றனர். எனவே, அந்த மீனவர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Central Government, September, Semester Examination
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...