×

இன்று எந்த தளர்வுகளும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு

* அனைத்துக் கடைகளும் மூடப்படும் என்பதால் பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
* தமிழகம் முழுவதும் 6ம் கட்டமாக வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு ஞாயிறும் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
* தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்படும்.

சென்னை: மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், இன்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து கடைகள், பால், பத்திரிகை விற்பனை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகம் முழுவதும் தொற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மட்டும் 74 ஆயிரத்தை கடந்துள்ளது. அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டம் 7 ஆயிரத்து 500ம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்கள் தலா 5 ஆயிரத்தையும், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களும் ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது மண்டலங்கள் வாரியாக குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிறமாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியது. பின்னர் மாவட்டங்களில் நோய் தொற்று அதிவேகமாக பரவியது. இதைதொடர்ந்து தமிழக அரசு உடனே மண்டலத்திற்குள் இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் அனைத்தும் நிறுத்தி பொது போக்குவரத்துக்கு தடை விதித்தது. பின்னர் 6ம் கட்டமாக ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இதில், பொதுபோக்குவரத்து, திரையரங்குகள், வணிகவளாகங்கள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தும், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மற்றும் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்க அரசு அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

ஆனாலும், வரும் 31ம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளில் எந்த வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்த வாரம் முதல் நடைமுறையில் உள்ளது. இதன்படி இரண்டாவது ஞாயிற்று கிழமையான இன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்படும். பொதுமக்கள் இ-பாஸ் இன்றி வாகனங்களில் மாவட்டங்களை விட்டு மாவட்டம் சென்றாலோ அல்லது மாவட்டத்திற்குள் பயணித்தாலோ அவர்களை தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் மூடப்பட்டது.

 சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் போலீசார் ‘டிரோன் ’ மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் வெளியே வருவதை தடுக்க இன்ஸ்பெக்டர்கள் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். முகக்கவசம் இல்லாத மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத நபர்கள் மீது எந்த தயக்கமும் இன்றி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொது முழு ஊரடங்கு என்பதால் இன்று கடுமையாக விதிமுறை பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று காவல் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நேற்று காலை முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலர் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். சமூக இடைவெளி, மாஸ்க் போன்றவற்றை பலர் மறந்து பொருட்களை வாங்கிச் சென்றனர்.


Tags : Tamil Nadu , Tamil Nadu, full curfew
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...