×

பயிற்சிக்கு பணம் தேவைப்படுவதால் பிஎம்டபிள்யூ காரை விற்கப்போகிறேன்... டூட்டி சந்த் அறிவிப்பு

புவனேஸ்வர்: பயற்சிக்கு  பணம் தேவைப்படுவதாகக் கூறி  தடகள வீராங்கனை டூட்டி சந்த் தனது பிஎம்டபிள்யூ காரை விற்க  வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் டூட்டி சந்த் (24).   இந்தோனேசியாவில் 2018ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சமூக ஊடகமொன்றில் தனது  பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் மாடல் காரை விற்பனை  செய்யப்போவதாக அறிவிப்பு ஒன்றை வௌியிட்டார். அந்த காரின் மதிப்பு 30 லட்ச ரூபாய். பயிற்சிக்கான செலவினங்களை சமாளிக்க  காரை விற்பதாகவும், அதை பராமரிப்பது சிரமமாக இருப்பதாகவும்  பதிவிட்டிருந்தார். என்ன ஆனதோ அடுத்த சில மணி நேரங்களில் தனது பதிவை டூட்டி சந்த் நீக்கி விட்டார்.

இது குறித்து கேட்டபோது, ‘கொரோனா பீதியால் எந்த ஸ்பான்சரும் எனது பயிற்சிக்கு செலவிடத் தயாராக இல்லை. எனக்கு பணம் தேவைப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் பயிற்சி,  உணவு செலவுகளை சமாளிக்க  காரை விற்க முடிவு செய்துள்ளேன். அந்த காரை யாரும் பரிசாக தரவில்லை. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்றதற்காக  ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கினார். அந்த பணத்தில் வீடு கட்டியதுடன், இந்த காரையும் வாங்கினேன். என்னிடம்  ஏற்கனவே 2 கார்கள் உள்ளன. இப்போது 3வது காரை நிறுத்த இடமில்லாததால்  ஒன்றை விற்க விரும்புகிறேன்’ என்றார். பயிற்சிக்காக காரை விற்கிறேன் என்று டூட்டி சந்த் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : BMW ,Duty Chand , BMW car, for sale
× RELATED நீலகிரியில் ஆய்வு செய்து விட்டு...