×

கொரோனா அறிகுறி உள்ள பலர் பரிசோதனைக்கு வருவதில்லை: மாநகராட்சி ஆணையர் பேட்டி

துரைப்பாக்கம்: சென்னையில் கொரோனா அறிகுறி உள்ள பலர் பரிசோதனைக்கு வருவதில்லை எனவும், இதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம் நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் இலவச டயாலசிஸ் மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஏழைகள் டயாலசிஸ் கிடைக்காமல் தவறான முடிவுக்கு செல்வதை தடுக்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு மற்றும் பரிசோதனையை இரட்டிப்பு செய்வது போன்ற அரசின் பல நடவடிக்கைகள் பயனளித்துள்ளன.

80 சதவீதம் பேர் மட்டுமே தற்போது முகக்கவசம் பயன்படுத்துகின்றனர். சென்னையில் மார்கெட் பகுதிகளில் சமூக இடைவெளி அவசியமாகிறது. அதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் தேவையற்ற சேவைகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு பென்சன் தொகையை வங்கி ஊழியர்களே வீட்டிற்கு சென்று அளிக்க வேண்டும். கர்ப்பிணிகளுக்கு பிரசவ தேதிக்கு முன்பாக 15 நாட்களுக்கு முன்னரே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறி உள்ளவர்கள் பலர் பரிசோதனைக்கு வருவதில்லை. இதன் மூலம் பலருக்க நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்த எண்ணத்தை கைவிட்டு, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இதுவரை 4 மாற்றுத் திறனாளிகள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு தெருவில் 3 வீடுகளுக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டால் தான் அந்த தெருவே முழுதாக மூடப்படும். அதே தெருவில் ஒரு வீட்டிற்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றால் அவர்கள் வீட்டு நுழைவாயிலில் தடுப்பு அமைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் தினசரி பாதிக்கப்பட்டோர் உடல்நிலை குறித்தும் கேட்டறிந்து வரப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Commissioner ,Corporation ,Municipal Commissioner , Corona, Commissioner of the Corporation
× RELATED காலை 5.30 மணி முதல் மாதிரி வாக்குப்பதிவு:...