×

ஊரடங்கில் இலவச உணவு வழங்கியதற்காக அம்மா உணவகங்களுக்கு 40 கோடி வழங்க வேண்டும்: அரசுக்கு மாநகராட்சி கடிதம்

சென்னை: நூறு நாள் ஊரடங்கில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கியதற்காக அம்மா உணவகங்களுக்கு 40 கோடி நிதி வழங்க வேண்டும், என
அரசுக்கு மாநகராட்சி கடிதம் அனுப்பி உள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் மே மாத இறுதி வரை 4 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏழை எளிய மக்கள் வேலை இழந்து, வருமையில் தவித்தனர். இந்நிலையில், சென்னையில் உள்ள 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களில், ஊரடங்கு காலத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்தது.
அதன்படி, உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாத தொடக்கத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது.

இதனால், அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஜூன் 19ம் தேதி  முதல் ஜூலை 5ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, இந்த காலத்தில் இந்த 4 மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று தமிழக அறிவித்தது. இதன்படி சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாட்களில் மொத்தம் 100 நாட்கள் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.

மேற்கண்ட நாட்களில் 25 கோடி உணவுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சாதாரண நாட்களில் விற்பனையாகும் அளவை விட 30 சதவீதம் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதற்கான செலவு தொகை ₹40 கோடியை அரசு அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த தொகையை அரசு விரைவில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியுதவி என்ன ஆனது?: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவுக்கான செலவு தொகையை தாங்கள் வழங்குவதாக ஆளும்கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர். அதன்படி, திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆளும்கட்சியினர் லட்சக்கணக்கில் நிதியுதவியை மாநகராட்சி அதிகாரிகளிடம் அளித்தனர். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இதேபோல், நிதி வழங்குவதாக அறிவித்த ஆளும்கட்சி நிர்வாகிகள் பலர் எந்த நிதியையும் அளிக்காமல் டிமிக்கி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

விற்ற உணவு எண்ணிக்கை
இட்லி        3.05 கோடி
சப்பாத்தி        1.02 கோடி
பொங்கல்        27 லட்சம்
சாம்பார் சாதம்    23 லட்சம்
தயிர் சாதம்        14.50 லட்சம்
லெமன் சாதம்    12.5 லட்சம்
கருவேப்பிலை    9 லட்சம்
புளி சாதம்        4.7 லட்சம்

Tags : government ,Corporation , Curfew, free food, amma unavagam, government, corporation, letter
× RELATED டிப்போவில் ஓய்வெடுத்தவரிடம் செல்போன் திருடிய பஸ் டிரைவர்