×

மழைநீர் கால்வாய் அடைப்பால் கழிவுநீர் குளமாக மாறிய சாலை: நோய் தொற்று பீதியில் மக்கள்

பெரம்பூர்: சென்னை திருவிக நகர் மண்டலம் 70வது வார்டுக்கு உட்பட்ட ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள முதல் தெருவில் கடந்த 10 நாட்களுக்கு முன், மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கியது. இதுபற்றி அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த மழையில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலை கழிவுநீர் குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுபற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலையில் கழிவுநீர் தேக்கம் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தால், கொரோனா பாதிக்கப்பட்ட இடத்தில் பணிகளை கவனித்து வருகிறோம், அதனால் தற்போது வர இயலாது என கூறுகின்றனர். கடந்த 10 நாட்களாக தேங்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. பலருக்கு காய்ச்சலும் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Road ,sewage pond , Rainwater canal, sewage, infection
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...