×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

* பஸ் போக்குவரத்து, பேரூராட்சி, நகராட்சிகளில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து முக்கிய முடிவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மறுதினம்(14ம் தேதி) தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பஸ் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி, கோயில்களில் வழிபாட்டுக்கு அனுமதி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அளித்து வருகிறது. ஆனாலும், கொரோனா வைரஸ் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

குறிப்பாக சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் மதுரை உள்ளிட்ட நகர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக, கடந்த மாதம் 19ம் தேதியில் இருந்து கடந்த 5ம் தேதி வரை 17 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு ஒரு வகையில் பலன் கிடைத்தது. சென்னையில் தினசரி நோயின் தாக்கம் 2000 என்று இருந்த நிலை மாறி, தற்போது தினசரி சுமார் 1,200 பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதே நேரம் உயிரிழப்பு எண்ணிக்கை தமிழகத்தில் தினசரி 60ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மதுரையில் இன்று வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதேபோன்று, கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று குறைந்தாலும், வட, தென்மாவட்டங்களில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனி சாமி தலைமையில் நாளை மறுதினம் (14ம் தேதி, செவ்வாய்) மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் 10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் ஆகிய மூன்று மூத்த அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். அதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்படுகிறது.மேலும், தமிழகத்தில் கடந்த 19ம் தேதியில் இருந்து சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் இயக்குவது பற்றி ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று, தற்போது கிராமப்பகுதிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாகவருமானம் வரும் கோயில்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதை மேலும் விரிவுபடுத்தி பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள கோயில்களையும் திறக்க அனுமதி அளிக்கப்படலாம்.
தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாக (ஏப்ரல் முதல் ஜூலை வரை) பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. அதனால் பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்? தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது போன்று அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன வசதிகளை ஏற்படுத்தி தரலாம்? கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வை மத்திய அரசு செப்டம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், அதை முதல்வர் எடப்பாடி நேற்று நிராகரித்துள்ளார். செமஸ்டர் தேர்வு நடத்த முடியாதபட்சத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் முறைகள், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நாளை மறுதினம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, முடிவுகள் எடுத்து அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரம், தமிழகத்தில் ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

ஏற்கனவே, மருத்துவ நிபுணர்கள் குழு கடந்த 29ம் தேதி, “ஊரடங்கு என்பது பெரிய கோடாரியை வைத்து கொசுவை அடிப்பது போன்றது. கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு ஆகாது” என்று கூறி இருந்தனர். அதனால், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளை அறிவிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இ-பாஸ் வழங்குவதை எளிமையாக்க வேண்டும்
தமிழகத்தில் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இ-பாஸ் கேட்டு விண்ணப்பம் செய்தாலும், வழங்கப்படாமல் நிராகரிக்கப்படுவதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். நெருங்கிய உறவினர் திருமணம் அல்லது நெருங்கிய உறவினர் மரணம் ஆகிய இரண்டு காரணங்களுக்கும் சரியான ஆதாரம் இருந்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. மற்றபடி இ-பாஸ் வழங்கினால், கொரோனா சோதனை, தனிமை முகாமில் இருக்க வைப்பது என பல கெடுபிடிகள் உள்ளது.

இதனால், கடந்த சில மாதங்களாக பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்க கூட செல்ல முடியாமல் திருமணங்கள் தடைபட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக வீட்டிலேயே அடைபட்டு கிடப்பதால், மனஉளைச்சல் அடைந்துள்ளனர். பெற்றோர் பிள்ளைகளை பார்க்க முடியவில்லை, பிள்ளைகள் பெற்றோர்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. அதனால் இ-பாஸ் முறையை எளிமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Tags : Edappadi Palanisamy ,meeting ,Cabinet ,Tamil Nadu , Chief Minister Edappadi Palanisamy, Tamil Nadu Cabinet Meeting
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்