×

உ.பி.யில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கடைசி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும் வரை ஓயமாட்டேன்: தினேஷ்குமார் ஐபிஎஸ் பேட்டி

லக்னோ: உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவனை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2ம் தேதி இரவில் அவனது கிராமமான பிக்ருவுக்கு போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினான்.  இந்த சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, ரவுடி விகாஸ் துபேவை கைது செய்யும் பணியில் உத்தரபிரதேச போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் அம்மாநில போலீஸ் பிடியில் விகாஸ் துபே சிக்கினான்.

இதையடுத்து, உத்தரபிரதேச போலீசாரிடம் விகாஸ் துபே ஒப்படைக்கப்பட்டான். மத்திய பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு விகாஸ் துபேவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.  கான்பூர் வருவதற்கு சில கிலோமீட்டர்களே எஞ்சியிருந்த நிலையில், அவர்கள் வந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி ரவுடி விகாஸ் துபே தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விகாஸ் துபேவை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ்குமார் ஐபிஎஸ்,காளான் போன்ற இந்த ரவுடி கூட்டத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்தால்தான் உத்தரபிரதேசம் நிம்மதி பெருமூச்சு விடும்.

தமிழகம் போன்று அல்ல உத்தரபிரதேசம். இங்கு துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. 8 போலீஸ்காரர்களில் 5 போலீஸ்காரர்களின் உடல்களை சிதைத்து போட்டிருந்தனர்; அதை பார்த்ததும் நெஞ்சு பதறிவிட்டது. என்னுடன் வந்த காவலர்கள் அவர்களின் உடலை பார்த்து கண்ணீர் சிந்தி அப்படியே கீழே விழுந்துவிட்டனர். அமைச்சர் ஒருவரை காவல் நிலைய வளாகத்தில் கொன்றவர் விகாஸ் துபே. அந்த வழக்கில் இருந்தும் வெளி வந்துவிட்டார். விகாஸ் துபேவுக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் ஆதரவாக தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலர் இருக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் டி.எஸ்.பி உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கடைசி குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags : policemen ,incident ,UP ,interview ,Dineshkumar IPS ,Dinesh Kumar IPS ,shooting death , UP, Police Murder, Vikas Dube, Dineshkumar IPS
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு