×

காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்த வளர்ச்சி பணிகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நிறைவடைந்த பணிகளுக்கு பணம் வழங்காமல் இழுத்தடிப்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் கூறுகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 ஒன்றியங்கள் அடங்கி உள்ளன. மேற்கண்ட ஒன்றியங்களில் அடங்கி உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலை, கால்வாய், கட்டிடங்கள், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பொறியாளர்கள் மூலம் அளவீடு புத்தகம் தயாரித்து, கோப்புகளை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த வளர்ச்சி பணிகளை மேல் அளவீடு செய்து ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் நேரில் சென்று பார்வையிட்டு மேலொப்பம் செய்த பிறகு, பணிகளுக்கான காசோலை வழங்க அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியங்களில் நிறைவடைந்த பணிகளை காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர் மேல் அளவீடு செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாகவும், நிறைவடைந்த பணிகளுக்கு ஜே.டி.ஓ., உதவி செயற்பொறியாளர் பார்வைக்கு கொண்டு செல்லாமல் அலைக்கழித்து வருவதாகவும் ஒப்பந்ததாரர்கள் புலம்பி வருகின்றனர்.     மேலும் பல லட்சங்கள் வட்டிக்கு கடன் வாங்கி பணிகள் செய்து கொடுப்பதாகவும், நிறைவடைந்த பணிகளுக்கு பணம் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.   

கமிஷன் கொடுத்தால் பில் ரெடி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து வளர்ச்சி பணிகளுக்கான கோப்புகள் காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. உதவி செயற்பொறியாளர், மேல்அளவீடு செய்த பிறகே ஒப்பந்ததாரர்களுக்கு, அந்தந்த ஒன்றிய அலுவலகங்கள் மூலம் பணபட்டுவாடா நடைபெறும்.  தற்போது காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள ஜே.டி.ஓ. என்பவர் அலுவலகத்திற்கு 3 சதவீதம் மற்றும் தனக்கும் கமிஷன் தொகை பெற்றுக்கொண்ட பிறகே கோப்புகளை உதவி செயற்பொறியாளர் பார்வைக்கு கொண்டு செல்வதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 மேலும் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஓரிரு நாட்களில் முடித்துகொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து செயற்பொறியாளர் கவனத்திற்கு கொண்டு செல்ல அலுவலகம் சென்றால், அதிகாரிகளை பார்க்க முடியாது, இங்கு எல்லாம் நான் தான் என்று அலட்டிக்கொள்கிறார். எனவே மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Office ,Assistant Engineer ,Kanchipuram , Kanchipuram, Office of the Assistant Executive
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்