×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ ஏடிஎஸ்பி தலைமையில் விசாரணை துவக்கம்

* சிபிசிஐடி போலீசார் ஆவணங்களை ஒப்படைத்தனர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகள் நேற்று விசாரணையை துவக்கினர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த மாதம் 19ம் தேதி இரவு ஊரடங்கு காலத்தில் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீசார் அழைத்துச்சென்றனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. இதில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

மேலும் மதுரை ஐகோர்ட் உத்தரவின்பேரில் இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் தர், எஸ்ஐகள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, எஸ்ஐ பால்துரை, ஏட்டுகள் செல்லத்துரை, சாமித்துரை, போலீசார் ெவயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 5 பேரையும் 3 நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்ததால், அதன்பேரில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் கடந்த 7ம் தேதி மாலை வழக்குப்பதிவு செய்தனர். அதாவது, கோவில்பட்டி கிழக்கு போலீசார் பதிவு செய்த அதே 176 (1ஏ),(1) பிரிவில் இந்த இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், வழக்கு தொடர்பாக சிபிஐ ஏடிஎஸ்பி விஜய்குமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணையை துவங்க இருப்பதாகவும் அதற்கு தேவையான உதவிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டிருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலிருந்து நேற்று மதியம் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனுராக் சிங், பூரன் குமார், சப்- இன்ஸ்பெக்டர்கள்  சுஷில் குமார் வர்மா, சச்சின் மற்றும் போலீசார் பவன்குமார் திரிபாதி, சைலேந்திரகுமார், அஜய்குமார் ஆகிய 8 பேர் கொண்ட  குழுவினர் மதுரை வந்தனர். அவர்கள் அங்கிருந்து  3 கார்கள் மூலம் மாலை 3.50 மணிக்கு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர். அங்கு சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தலைமையிலான அதிகாரிகள் வழக்கு ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர். மேலும் அவர்கள், ஐஜி சங்கர் உள்ளிட்ட சிபிசிஐடி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் வழக்கு விசாரணையை முறைப்படி தொடங்கியுள்ளனர்.


Tags : Sathankulam ,CBI ,ATSP , Sathankulam, father, son, murder case: CBI ATSP chief, Investigation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...