×

ம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார் பூங்கா: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

ரீவா:  மத்தியப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி பூங்காவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்தியப்பிரதேசத்தின் ரீவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 1500 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சூரிய மின்சக்தி நிலையம் தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய சோலார் பூங்காவாக கருதப்படுகிறது. இதனை டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக திறந்து வைத்தார்.
விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:  சூரிய மின்சக்தியானது,  நிச்சயமானது, தூய்மையானது, பாதுகாப்பானது. உலகிலேயே 5 மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தியாளர்களில் தற்போது இந்தியாவும் ஒன்றாகும்.

ரீவா சூரிய மின்சக்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின் உற்பத்தி மத்தியப்பிரதேச மின்பகிர்மான நிலையத்துக்கு மட்டுமல்ல, டெல்லி மெட்ரோ நிர்வாகத்துக்கும் வழங்கப்படும்.   இந்த ரீவா சூரிய மின்உற்பத்தி நிலையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி நிலையமாகும். டெல்லி மெட்ரோ நிர்வாகம் மாநிலத்துக்கு வெளியே உள்ள நிறுவன வாடிக்கையாளர்களில் ஒன்றாகும். மின்உற்பத்தியில் தற்சார்புடைமை என்பது ஆத்மநிர்பார் பாரத்தின் ஒரு அங்கமாகும். சூரிய மின் உற்பத்தி இந்த நோக்கத்தை அடைவதில் ஒருங்கிணைந்த பங்கை வகிக்கும். இந்த உலகமானது பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாமா, சூற்றுச்சூழலில் கவனம் செலுத்தலாமா என தடுமாறி வருகின்றது. ஆனால் சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் முரண்பட்டது கிடையாது. ஒன்றை ஒன்று பூர்த்தி செய்பவை என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது.

தூய்மை இந்தியா, ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புக்கள், சிஎன்ஜி மற்றும் மின்சாரம் சார்ந்த போக்குவரத்து உள்ளிட்டவற்றுடன் சூரிய மின்உற்பத்தி திட்டத்தையும் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. ரீவா சூரிய மின் சக்தி திட்டமானது 21ம் நூற்றாண்டில் மின்உற்பத்தி துறையில் முக்கிய ஆதாரமாக இருக்கும்.ஷாஜாபூர், நீமுச் மற்றும் சட்டர்பூரிலும் சூரிய மின்சக்தி திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* ரீவா சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையமானது சுமார் 1500 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு 500 ஏக்கரிலும் தலா 250மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Modi ,Asia ,park ,country ,nation , Madhya Pradesh, Asia, Solar Park, PM Modi
× RELATED கொரோனாவால் உயிரிழந்த திருப்பதி...