×

கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: தலைமை செயலகம் இன்றும், நாளையும் மூடல்

* முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அறைகளில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சென்னை, கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள தலைமை செயலகம் இன்றும், நாளையும்  மூடப்படுகிறது. முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்புநிலை திரும்பியுள்ளது. அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில்பணியாற்றி வருகிறார்கள்.

அதன்படி சென்னை, தலைமை செயலகத்தில் மட்டும் தினசரி 3,000க்கு மேற்பட்டோர் பணிக்கு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவலாக  தலைமை செயலக ஊழியர்களிடம் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட தலைமை செயலக ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பத்தினர் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், செல்லூர் ராஜு உள்ளிட்ட 3 பேர், ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர், குருப்-1 அதிகாரிகள் முதல் டி பிரிவு அலுவலர்கள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் 10ம் தேதி தமிழக தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவலை தொடர்ந்து மத்திய சுகாதார துறையின் புதிய வழிபாட்டு நெறிமுறையின்படி ஒவ்வொரு 2வது சனிக்கிழமையும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகமும் மூடப்பட்டு கிருமி நாசினி அடிக்கப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார். தலைமை செயலாளரின் உத்தரவுபடி, சென்னை கோட்டை வளாகத்தில் உள்ள தலைமை செயலகத்தில் சுமார் 32 துறை அலுவலகங்களும் கடந்த மாதம் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டு கிருமி நாசினி அடிக்கப்பட்டது.
அதேபோன்று, இந்த மாதத்தின் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும், நாளையும் தலைமை செயலக வளாகத்தில் உள்ள அனைத்து துறை அலுவலகங்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பணியாளர்கள் யாரும் வேலைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் இன்று காலை 8 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களையும்  சுத்தப்படுத்தி, கிருமி நாசினி அடிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின் அறைகளிலும் கிருமிநாசினி அடிக்கப்பட உள்ளது.  வழக்கமாக, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கூட தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது உதவியாளர்கள், செய்தி பிரிவு ஊழியர்கள், சில முக்கிய துறை ஊழியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் பணிகளை கவனிப்பார்கள். அதனால் வருஷம் முழுவதும் 365 நாட்களும் தலைமை செயலகம் செயல்படும்.

ஆனால், தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக ஒவ்வொரு 2வது சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் தலைமை செயலகம் மூடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமை செயலகம் போன்று சென்னையில் உள்ள எழிலகம், பள்ளி கல்வி துறை அலுவலகம், டிஎம்எஸ் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களும் இன்றும், நாளையும் மூடப்பட்டு சுத்தப்படுத்தி, கிருமி நாசினி அடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Echo ,General Secretariat , Corona, Chief Secretariat, Closure
× RELATED வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை!:...