×

அரசு ஊழியருக்கு மதிப்பூதியம் ரத்து

சென்னை: கொரோனா ஊரடங்கால்  ஏற்பட்ட நிதி பிரச்னை காரணமாக அரசு ஊழியர்கள், அதிகாரிகள், வாரியம்,  ஆணையம் போன்றவற்றில் மேற்கொள்ளும் மாற்றுப் பணிகளுக்கு மதிப்பூதியம் (வெகுமானம்) இனி வழங்கப்பட மாட்டாது என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம்  இருந்து தமிழகத்திற்கு போதுமான நிதி  கிடைக்கவில்லை.  ஜிஎஸ்டி வருவாயை வைத்து சமாளிக்காலம் என்றால் தமிழகத்திற்கு உரிய பங்கை தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது. தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை தருவதை விட, பிரதமரின் தனிப்பட்ட நிதியான ‘பிஎம் கேர்சு’க்குதான்  தமிழக விஐபிகளும், நடிகர்களும், தொழிலதிபர்களும்  அள்ளித் தருகின்றனர். அதனால் நிதி பற்றாக்குறையால் தமிழக அரசு திணறி வருகிறது.

அதற்காக பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு மற்றொரு சிக்கன நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது தொடர்பாக  தமிழக அரசின் நிதித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழக அரசு ஊழியர்கள், அதிகாரிகள்  பணியின் போது கடைபிடிக்கப்படும் நல்லொழுக்கத்தின் அடிப்படையில்  தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட  ஆணையங்கள், வாரியங்கள், குழுக்கள்,  அமைப்புகளுக்கு உறுப்பினர்களாகவும், தலைவர், செயலாளர்களாகவும், இயக்குநர்களாவும்  நியமிக்கப்படுகின்றனர்.  அப்படி நியமிக்கப்பட்டவர்களுக்கு  பணி தகுதிக்கு ஏற்ப அல்லது, பங்கேற்கும் கூட்டங்களுக்கு ஏற்ப  மதிப்பூதியம்(வெகுமானம்) வழங்கப்படுகிறது.

இனி இந்த மதிப்பூதியம் வழங்கப்படமாட்டாது. கோவிட்-19 ஆல் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இது  அரசு சாரா உறுப்பினர்கள், தலைவர்கள், இயக்குநர்கள்  பொறுப்பு வகிப்பவர்களுக்கும் பொருந்தும்.  மதிப்பூதியம் வழங்க ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டு, வழங்கும் நிலையில் இருந்தாலும் அவை அமல்படுத்தப்பட மாட்டாது. அதே நேரத்தில் ஏற்கனவே அளித்து இருந்தாலும் மதிப்பூதியம் திரும்ப பெறப்படமாட்டாது’ என்று கூறப்பட்டுள்ளது.

Tags : servant ,Cancellation , Government Employee, Valuation Canceled
× RELATED 50 சதவீதம் முடிந்த நிலையில் விடுதி...