×

8 போலீசாரை படுகொலை செய்த பிரபல ரவுடி விகாஸ் சுட்டுக்கொலை: கார் விபத்தை பயன்படுத்தி தப்பி ஓட முயன்றபோது போலீஸ் அதிரடி

* என்கவுன்டரில் 5 சந்தேகங்கள்

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபே கைதான அடுத்த நாளே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், பலத்த சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கான்பூர் செல்லும் வழியில் போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், தப்ப முயன்ற விகாசை சுட்டுக் கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தில் ரவுடி கும்பல் தலைவன் விகாஸ் துபேவை கைது செய்வதற்காக போலீசார் கடந்த வாரம் சென்றனர். அப்போது மின்தடையை ஏற்படுத்தி வீடுகளின் மேற்கூரையில் பதுங்கி இருந்து போலீசார் மீது ரவுடிகளை ஏவி விகாஸ் துப்பாக்கி சூடு நடத்தினான். இதில் 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விகாஸ் உட்பட அவனது கூட்டாளிகள் தலைமறைவாகினர். அவர்களை பிடிக்க 25 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. விகாஸ் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, விகாசின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக உபி போலீசின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 5 கூட்டாளிகள் கொல்லப்பட்ட நிலையில், விகாஸ் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டான். உஜ்ஜைன் கோயிலுக்கு வந்த அவனை சுற்றி வளைத்து பிடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சரணடைய வந்த விகாஸை மடக்கி பிடித்ததாக போலீஸ் கூறுவதாக சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட விகாஸ் நேற்று அதிகாலை கான்பூருக்கு அழைத்து செல்வதற்கான பணிகள் நடந்தன. அதிரடிப்படை போலீசார் பலத்த பாதுகாப்புடன் காரில் விகாஸ் அழைத்து செல்லப்பட்டான். ஆனால் வழியிலேயே அவன், போலீசாரின் துப்பாக்கி பறித்துக் கொண்டு தப்ப முயன்றதால், வேறு வழியின்றி சுட்டுக் கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. கான்பூர் ஐஜி மோகித் அகர்வால் அளித்த பேட்டியில், ‘‘கான்பூருக்கு 30 கி.மீ. தொலைவு இருக்கும்போது, காலை 6 மணி அளவில், பலத்த மழை காரணமாக மோசமாக இருந்த குறுகிய சாலை வளைவில் விகாஸ் அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவன் போலீசாரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்றான். மேலும் போலீசாரை நோக்கியும் துப்பாக்கியால் சுட்டான். இதில், 2 பேர் குண்டு காயமடைந்தனர். எனவே வேறுவழியின்றி போலீசார் தற்பாதுகாப்புக்காக அவன் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவன் இறந்தான்’’ என்றார்.
கூட்டாளிகள் 5 பேரும் கொல்லப்பட்ட நிலையில், ரவுடி கும்பல் தலைவன் விகாசும் கைதான அடுத்த நாளே என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  50 வயதாகும் விகாஸ் துபே மீது 60 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொலை, கடத்தல், கடத்தல் முயற்சி என ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் அரசியல் கொலைகளும் உள்ளன.

இதனால், விகாஸ் துபே பொது வெளியில் பேசினால், பல அரசியல் கொலைகளுக்கான உண்மையான காரணங்கள் அம்பலமாகுமோ என்ற காரணத்தால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டாரா எனவும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதோடு, நேற்று முன்தினம் இரவுதான் விகாஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட மாட்டார் என உபி போலீசாரும் அம்மாநில அரசும் உறுதி அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரத்திலேயே விகாஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதோடு, விகாஸ் அழைத்துச் செல்லப்பட்ட போலீஸ் வாகனத்தை பின்தொடர்ந்து மீடியா குழுவினர் கார் சென்றுள்ளது. அதை 2 கிமீ முன்பாகவே போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

எனவே இந்த என்கவுன்டர் தொடர்பாக உபி பாஜ அரசை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 1அதிகாலை 4 மணிக்கு சுங்கச்சாவடி ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவில் விகாஸ் அமர்ந்திருந்த போலீஸ் வாகனம் வேறு, விபத்துக்குள்ளான வாகனம் வேறு. எதற்காக அவர் வாகனம் மாற்றி அமர வைக்கப்பட்டார்? 2போலீஸ் கான்வாயை மீடியா குழுவினர் கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றுள்ளது. ஆனால், விபத்து நடந்த இடத்திலிருந்து 2 கிமீ முன்பாகவே மீடியா குழுவினர் கார் நிறுத்தப்பட்டது ஏன்?

3சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதாகவும் ஆனால் விபத்து எதுவும் நடந்ததை நேரில் பார்க்கவில்லை என்றும் கூறி உள்ளனர். போலீசார் அந்த இடத்திலிருந்து தங்களை விரட்டியதாகவும் கூறினர். 4பயங்கரமான குற்றவாளியை ஏன் கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் செல்லவில்லை? 5உஜ்ஜைன் கோயில் வளாகத்தில் கைதான போது எந்த எதிர்ப்பும் காட்டாத விகாஸ், திடீரென தப்ப முயன்றது ஏன்?

4 குண்டுகள்
விகாஸ் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் கமல் கூறுகையில், ‘‘குண்டு காயத்துடன் விகாஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்த போதே உயிரிழந்திருந்தார். அவரது உடலில் 4 குண்டுகள் பாய்ந்திருந்தன. 3 மார்பிலும், 1 குண்டு கையிலும் துளைத்துள்ளது’’ என்றார்.

நீதி விசாரணை வேண்டும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘விகாஸ் போன்ற கிரிமினல்களை பாதுகாத்து வளர்த்து விடுவது யார் என்ற உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும். எனவே, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் உயிர் தியாகம் செய்த 8 போலீசாருக்கு நியாயம் கிடைக்கும்’’ என்றார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டர் பதிவில், “விகாஸ் துபே கொல்லப்பட்டதன் மூலமாக உத்தரப்பிரதேச அரசு ரகசியங்களில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள உதவியுள்ளது என பதிவிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மொய்திரா டிவிட்டரில், ‘‘கொல்வது மட்டுமே உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் என்கவுன்ட்டர் ராஜ்ஜியத்தில் நீதியாக கருதப்படுகிறது’’ என்றார்.



Tags : Rowdy Vikas ,policemen ,Famous Rowdy Vikas ,car accident , 8 police massacre, celebrity Rowdy Vikas, shooting, car accident
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...