×

தமிழகத்தில் தேர்தலுக்கு 8 மாதங்களே உள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்

* 14 மாவட்டங்களுக்கு புதிய எஸ்.பி.க்கள்
* 17 சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்கள் நியமனம்
* 14 மாவட்டங்களுக்கு புதிய எஸ்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாநகரங்களில் பணியாற்றிய 17 சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
* சென்னையில் மட்டும் மொத்தமாக 12 துணை கமிஷனர்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.
* கடலோர பாதுகாப்பு செயலாக்கப் பிரிவுக்கு புதியதாக கண்காணிப்பாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
* தமிழகம் முழுவதும் 14 ஏஎஸ்பிக்கள் மற்றும் ஏடிஎஸ்பிக்கள், எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சென்னை: தமிழகத்தில் தேர்தலுக்கு 8 மாதமே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 51 போலீஸ் உயர் அதிகாரிகளை அதிரடியாக மாற்றி உள்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதில், 14 மாவட்ட எஸ்பிக்களும், மாநகரங்களில் உள்ள 17 சட்டம்- ஒழுங்கு துணை கமிஷனர்களும் மாற்றப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பையும் மீறி சட்டம் -ஒழுங்கு கெடும் வகையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. குறிப்பாக, சாத்தான்குளத்தில் காவல்நிலையத்தில் வைத்தே 2 வியாபாரிகள் அடித்துக் கொல்லப்பட்டனர். பல்வேறு இடங்களில் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதேநேரத்தில், மாநிலத்தில் வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வேண்டும்.

இடையில், வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் ஏப்ரல் வரை 8 மாதங்களே உள்ளன. இதனால் தேர்தலுக்கு தற்போது தமிழக அரசும், அதிமுகவும் தயாராகி வருகிறது. இதற்காக தங்களுக்கு வேண்டிய போலீஸ் அதிகாரிகளை சட்டம் -ஒழுங்கு பகுதிகளில் நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றார்போல போலீஸ் அதிகாரிகளை அரசு நியமனம் செய்து வருகிறது. ரவுடிகள் பிரச்னை உள்ள பகுதிகளில் மட்டும் நேர்மையான அதிகாரிகளை நியமனம் செய்து விட்டு, மற்ற இடங்களில் தேர்தலை மனதில் வைத்தே பணி நியமனங்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, ஜூலை 1ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட 39 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், 14 மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 17 சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனர்கள் உள்பட 51 போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை விபசார தடுப்பு பிரிவு  உதவி கமிஷனராக இருந்த தீபா சத்யனுக்கு சென்னை மத்திய குற்றப்பிாிவு துணை கமிஷனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப்பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஏசுபாதம் சென்னை எஸ்பிசிஐடி (மாநில உளவுப் பிரிவு) கண்காணிப்பாளராகவும், சென்னை எஸ்பிசிஐடி கண்காணிப்பாளர் அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த சிபி சக்கரவர்த்தி சென்னை நிர்வாக பிாிவு உதவி ஐஜியாகவும், சென்னை நிர்வாகப் பிரிவு உதவி ஐஜி முத்தரசி சென்னை கணினிமயமாக்கல் பிாிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த பதவியில் இருந்த விக்ரமன் சென்னை அடையாறு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை அடையாறு துணை கமிஷனர் பகலவன், கரூர் மாவட்ட எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த பாண்டியராஜன் வணிக குற்றப் பிரிவு சிஐடி எஸ்பியாகவும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஏஎஸ்பியாக இருந்த அல்லடிப்பள்ளி பவன் குமார் ரெட்டி, பதவி உயர்வு பெற்று திருச்சி நகர சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனராகவும், அந்த பதவியில் இருந்த நிஷா சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராகவும், அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் சென்னை திட்டமிடுதல் ஏஐஜியாகவும், சென்னை திட்டமிடுதல் ஏஐஜி பாலகிருஷ்ணன் மாதவரம் துணை கமிஷனராகவும், மாதவரம் துணை கமிஷனர் ரவளி பிரியா, திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாகவும், அந்த பதவியில் இருந்த சக்திவேல்  சென்னை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஏஎஸ்பியாக இருந்த ஹரிகரன் பிரசாத், பதவி உயர்வு பெற்று சென்னை தி.நகர் துணை கமிஷனராகவும், தி.நகர் துணை கமிஷனர் அசோக் குமார், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனராகவும், சென்னை கவர்னர் பாதுகாப்பு பிரிவு ஏஎஸ்பியாக இருந்த டோங்குரே பிரவீன் உமேஷ்  பதவி உயர்வு பெற்று, அதே பதவியில் நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஏஎஸ்பியாக இருந்த சிவபிரசாத் பதவி உயர்வு பெற்று மதுரை நகர சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனராகவும், மதுரை நகர சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனர் கார்த்திக் சென்னை பூக்கடை துணை கமிஷனராகவும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஏஎஸ்பியாக இருந்த ஜவகர் பதவி உயர்வு பெற்று சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராகவும், கரூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிாிவு ஏடிஎஸ்பியாக இருந்த தம்பிதுரை பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைய எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வண்டலூர் போலீஸ் அகாடமி ஏடிஎஸ்பியாக இருந்த ஆறுமுகசாமி பதவி உயர்வு பெற்று  சென்னை காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளராகவும், சேலம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த சுரேஷ்குமார் பதவி உயர்வு பெற்று திருப்பூர் நகர சட்டம் -ஒழுங்கு, குற்றப்பிாிவு, போக்குவரத்து துணை கமிஷனராகவும், இந்த பதவியில் இருந்த பத்ரி நாராயணன் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியாகவும், அந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளராகவும், ராமநாதபுரம் தலைமையிட ஏஎஸ்பியாக இருந்த தங்கவேல் பதவி உயர்வு பெற்று சென்னை மாநில மனித உரிமை ஆணைய எஸ்பியாகவும், சென்னை  சிறப்பு புலனாய்வு பிாிவு சிபிசிஐடி ஏஎஸ்பியாக இருந்த ரவி பதவி உயர்வு பெற்று சென்னை சிபிசிஐடி எஸ்பியாகவும், திருப்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏஎஸ்பியாக இருந்த குணசேகரன் பதவி உயர்வு பெற்று கோவை நகர தலைமையிட துணை கமிஷனராகவும், கோவை நகரை தலைமையிட துணைகமிஷனர் செல்வகுமார் திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனராகவும், இந்த பதவியில் இருந்த பிரபாகரன் மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை சிவில் சப்ளை சிஐடி எஸ்பியாக இருந்த ஸ்டாலின் கோவை நகர சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனராகவும், கோவை நகர சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன், புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாகவும், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பியாக இருந்த குமார் பதவி உயர்வு மூலம் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், சேலம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிாிவு ஏடிஎஸ்பியாக இருந்த சந்திரசேகரன் பதவி உயர்வு பெற்று சேலம் நகர சட்டம் -ஒழுங்கு துணை கமிஷனராகவும், இந்த பதவியில் இருந்த பி.தங்கதுரை ஈரோடு மாவட்ட எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த சக்தி கணேஷ், நமக்கல் மாவட்ட எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த அருளரசு கோவை மாட்ட எஸ்பியாகவும், இந்த பதவியில் இருந்த சுஜீத்குமார் மதுரை மாவட்ட எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட எஸ்பியாக இருந்த மணிவண்ணன்  திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாகவும், திருநெல்வேலி எஸ்பியாக இருந்த ஓம் பிரகாஷ் மீனா, சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாகவும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பி சண்முகபிரியா காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாகவும், சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த பெரோஸ்கான் அப்துல்லா சென்னை மாநகர நிர்வாக பிரிவு துணை கமிஷனராகவும், இந்த பதவியில் இருந்த செந்தில்குமார் சென்னை மாநகர கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனராகவும், சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் மனோகர், சென்னை சமூக நலன் ஏஐஜியாகவும், இப்பதவியில் இருந்த அதிவீரபாண்டியன் சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராகவும், திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல் ஹக் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாகவும்,

இந்த பதவியில் இருந்த ஜெயச்சந்திரன், திருச்சி மாவட்ட எஸ்பியாகவும், சென்னை சைபர் க்ரைம் எஸ்பி ஷெசாங்க் சாய், சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராகவும், இந்த பதவியில் இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சாவூர் எஸ்பியாகவும், இப் பதவியில் இருந்த மகேஸ்வரன் கடலோர செயலாக்கப்பிரிவு எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்கள் உடனடியாக பணியில் சேரும்படி டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Tags : police officers ,elections ,Tamil Nadu , Tamil Nadu Elections, Police Officers, Transfers
× RELATED மக்களவைத் தேர்தல் : தமிழ்நாட்டில் உள்ள...