ஏசி அறைகளில் அதிக நேரம் உலாவும் `கொரோனா’ காற்று மூலம் பரவுமா?...நெல்லை டாக்டர் விளக்கம்

நெல்லை: கொரோனா தொற்று காற்று மூலம் பரவுமா? என திகிலுடன் கேட்பவர்களுக்கு  நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மனநல துறை தலைவர் டாக்டர் ராமானுஜம் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவுகிறது என்றால் போபால் விஷவாயு போல, ரேடியோ டிவி சிக்னல் போல் காற்றில் பரவி ஜன்னல் வழியே நம் வீட்டுக்குள் வருவது என்று அர்த்தம் அல்ல. இரண்டு வகையில் வைரஸ் தொற்று பரவுகிறது. ஒன்று காற்றின் (Airborne)மூலம் பரவுகிறது. அடுத்தாக தரை மேஜை போன்ற பொருட்களை தொடுவதால் அதில் ஏற்கெனவே படிந்துள்ள நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது. நாம் பேசும்போது, பாடும் போது, மூச்சு விடும்போது, இருமும்போது தும்மும் போது வெளிவரும் எச்சில், சளி துளிகளில் வைரஸ்கள் உள்ளன.

இவற்றில் பெரிய துளிகள் கீழே தரையிலும் மேஜையிலும், சுவர்கள், கதவுகளிலும் விழுகின்றன. இவற்றைத் தொட்டு நம் கைகளை நமது வாய், மூக்கு, கண்களில் வைக்கும் போது நமக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதற்குத்தான் அடிக்கடி கைகளைக் கழுவச் சொல்கிறோம். சின்னத் துளிகள் கொஞ்ச நேரம் காற்றில் மிதக்கின்றன. அதிக கூட்டம் உள்ள இடங்கள், காற்றோட்டம் இல்லாத இடங்கள், ஏசி அறைகளில் காற்றில் அதிக நேரம் இவை இருக்கும். இவற்றின் மூலம் பரவுவதே ஏர்பார்ன் இன்பெக்‌சன் (Airborne infection) எனப்படுகிறது காற்றின் மூலம் பரவுதல் என்பது நெருக்கமாக இருப்பவர்கள், மிக அருகில் இருப்பவர்கள் தும்மினால், பேசினால், இருமினால் சிறிய துகள்கள் மூலம் எதிரே சுமார் ஆறு அடி வரை இருப்பவர்களுக்குத் தொற்றிக் கொள்ளும் என அர்த்தம். நெருக்கமாக இருப்பது, கூட்டங்கள், ஏசி அறைகள், மால்கள் போன்றவை அதிக ரிஸ்க் ஆகும். இதற்குத்தான் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும் என்கிறார்கள்.

மாஸ்க் அணிந்தால் சிறிய, பெரிய துகள்கள் வெளியேறுவது வெகுவாகக் குறையும். நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது பாதுகாப்பானது. நோயாளிகளைக்கூட திறந்த வெளிகளில் வைக்கலாம். இது ஏதோ திடீரென்று சொல்லப்படவில்லை. கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்தே சொல்லப்பட்டது. “காற்றில் பரவும் கொரோனா” என்று வரும் தகவல்களைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். கவனமாக இருந்தால் போதும். காற்றின் மூலம் என்றாலும் கைகளின் மூலம் பரவும் என்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க், கைகழுவுதல் எல்லாம் அவசியம் தேவை தான். இவை தான் நமது பாதுகாப்பு சாதனங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>