×

ஆடம்பரம், கூட்டம் கூட தேவையில்லாததால் பெற்றோர் அதிரடி கிராமங்களில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்

சேலம்: தமிழக கிராமப்புறங்களில் கொரோனா ஊரடங்கால் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இது பெண் குழந்தைகளின் உடல்நலம், கல்விக்கு உலை வைக்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் சிறு, குறு தொழிற்சாலைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் இயங்கத்தொடங்கின. தற்போது ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி 6வது கட்டமாக ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் கருதி கல்வி நிறுவனங்கள் திறக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கி நடத்தி வருகின்றன. இந்த ஊரடங்ககை  பயன்படுத்தி  கிராமப்புறங்களில் திருமணங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் சேலம், தர்மபுரி,கிருஷ்ணகிரி,திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் குழந்தை திருமணங்கள் ஓசையின்றி நடந்து வருவதாக ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர்.ஊரடங்கு என்பதால் கிராமப்புறங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பும், சமூக ஆர்வலர்களின் நாட்டமும் குறைந்து வருவதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது குறித்து பெண் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்புக்கான நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் பெண்களின் சதவீதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 1990ம் ஆண்டு  கணக்கெடுப்பின் படி ஆயிரம் ஆண்களுக்கு 850 முதல் 875 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. அன்றைய காலகட்டத்தில்  பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் அவலம் இருந்ததே இதற்கு காரணம்.இதையடுத்து அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் பல்வேறு நலத்திட்டங்களால் பிறப்பு விகிதம் உயர்ந்தது.2000ம் ஆண்டு காலகட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 982 பெண்கள் என்ற நிலை உருவானது. ஆனால் தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 875 முதல் 890 பெண்கள் என்ற விகிதமே உள்ளது.  கள்ளிப்பால் கொடுக்கும் பழக்கம் ஓய்ந்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?என்பதை கண்டறியும் ஸ்கேன் சென்டர்களால் மீண்டும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதுதான் இதற்கு காரணம்.

இப்படிப்பட்ட சூழலில் குடும்ப வறுமை, பாதுகாப்பு இல்லாமை போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2 முடித்தவுடன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.இயல்பு நாட்களில் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் இதை கண்டறிந்து தடுத்து நிறுத்தி வந்தனர்.தற்போது கொரோனா ஊரடங்கால் இது போன்ற நடவடிக்கைள் குறைந்துள்ளது. இதுவே குழந்தை திருமணங்கள் அதிகரிக்க காரணம்.
அதோடு ஊரை அழைத்து விருந்து வைக்க வேண்டாம்.உறவினர்களை அழைத்தாலும் வர மாட்டார்கள். ஆடம்பர செலவுகள் எதுவும் தேவையில்லை. சீர் வரிசை எதுவும் செய்யத்தேவையில்லை என்பதால் கிராமப்புறங்களில் பெரும்பாலான பெற்றோர்,குழந்தை திருமணங்களை நடத்தி வைக்கின்றனர். இதனால் அவர்களின் படிப்பும்,எதிர்காலமும் வீணாகிறது.இளம்வயது திருமணத்தால் தாய்மை அடைவதில் சிரமம், மகப்பேற்றில் சிக்கல்,உடல்நலத்தில்  பின்னடைவு என்று பல்வேறு அவலங்களும் நிகழ வாய்ப்புள்ளது. எனவே  பெற்றோர்,இது போன்ற திருமணங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

சட்டம் என்ன சொல்கிறது?
சிறார் திருமணம் என்னும் குழந்தை  திருமணத்தை நடத்துவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ₹1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.சிறார் திருமணம் பற்றிய தகவல் கிடைத்தால் அரசிடம் தெரிவிக்க வேண்டும். இதைமீறி 18 வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்தால் அத்திருமணமே செல்லாது என்று குழந்தை திருமண தடுப்புச்சட்டம் கூறுகிறது.

வயது வித்தியாசம் அதிகம்

திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் தற்போதும் டிமாண்ட் உள்ளது. 30 முதல் 40 வயதுடைய பலர் 16,17 வயதுடைய சிறுமிகளை திருமணம் செய்து கொள்கின்றனர். வறுமையில் வாடும் பெற்றோரை குறிவைத்து இவர்கள்,பெண் தேடி மணம் முடிக்கின்றனர். இதுவும் குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு அவலங்களுக்கு வித்திடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

பக்குவப்படாததால் நேருது விபரீதங்கள்
பொதுவாக பெண்கள் 22 வயதில்தான் மனதளவில் பக்குவம் அடைகின்றனர். அப்போது தான் அவர்கள் திருமணத்திற்கும்  தயாராகின்றனர். 16, 17 வயதில் திருமணம் செய்வதால் பெயரளவுக்கு வாழ்க்கையை தொடங்குகின்றனர்.இதனால் குடும்பத்தில் சண்டை,சச்சரவுகள் அதிகரிக்கிறது. எல்லாவற்றுக்கும் ேமலாக பிரசவத்தின்போது தாய், சேய் மரணம் உள்ளிட்ட விபரீதங்களும் நிகழ்கிறது. இது போன்ற சம்பவங்கள் ஒரு கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையை முழுமையான வெறுப்பில் தள்ளி, தற்கொலை முடிவுகளுக்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மனநல ஆலோசகர்கள்.


Tags : Parents Action Villages ,rise , Child marriages on the rise in villages during this pandemic situation
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை...