×

பழநி அருகே சொந்த ஊருக்கு நடந்து சென்ற 40 பீகார் தொழிலாளர்கள் மீட்பு

பழநி : பழநி அருகே கோழிப்பண்ணையில் போதிய சம்பளம், அடிப்படை வசதிகள் இல்லாததால், அங்கிருந்து வெளியேறி சொந்த ஊருக்கு நடந்து சென்ற, பீகாரை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் உள்ள புதுதாராபுரம் சாலையில் தும்பலப்பட்டி பகுதியில் 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் டிஎஸ்பி சிவா தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் பழனிச்சாமி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், அப்பகுதிக்கு சென்று, நடந்து சென்றவர்களை தடுத்து விசாரணை நடத்தினர்.

இதில், பீகார் மாநிலம், மத்தியாரி மாவட்டம், சபாகி பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன், பழநி அருகே மொல்லம்பட்டியில் உள்ள பிரபல தனியார் கோழிப்பண்ணையில் தங்கி பணி புரிந்ததாகவும், போதிய சம்பளம் மற்றும் அடிப்படை வசதி இல்லாததால், அங்கிருந்து வெளியேறி தங்களது சொந்த ஊருக்கு நடந்து செல்வதாகவும் தெரிவித்தனர். இ-பாஸ் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாது என, அவர்களிடம் விளக்கிய அதிகாரிகள், கீரனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுதொடர்பாக கோழிப்பண்ணை நிர்வாகத்திடம் பேசி, இ-பாஸ் ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், அதுவரை உணவு உள்ளிட்ட வசதி செய்து கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Bihar ,hometown ,Palani. ,Bihar Workers ,Palani ,Native , Bihar Workers,Walking ,Native ,officials , palani
× RELATED மாவா தயாரித்து விற்ற இருவர் கைது