தஞ்சையில் ஆற்றில் மூழ்கி சிறுமி பலி: மணல் அதிகளவு அள்ளியதால் ஆழம் ஏற்பட்டு சிறுமி பலியானதாக மக்கள் போராட்டம்!!!

தஞ்சை:  தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே 10 வயது சிறுமி ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததற்கு, ஆற்றில் அதிகளவு மணல் எடுக்கப்பட்டதே காரணம் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டியில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் மிக வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்த கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு மணல் கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை, தடுத்து நிறுத்தக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பாக 18க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒன்றிணைந்து பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், நேற்று இளங்காடு பகுதியை சேர்ந்த 10 வயது மாலினி குளிப்பதற்காக கொள்ளிடம் ஆற்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அரசு மணல் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் சிக்கி சிறுமி உயிரிழந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் சிறுமியின் உடலை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளும் குவாரிகளை மூடவேண்டும் என்றும், இறந்த மகளின் உயிருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மணல் குவாரிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். தற்போது 4வதாக மேலும் ஒரு சிறுமி உயிரிழந்துள்ளார். இதனால் உடனடியாக அரசு செயல்படுத்தும் மணல் குவாரியை மூட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இறந்த சிறுமியின் உடலை வாங்க மறுத்தும் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூடப்படவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, திருக்காட்டுப்பள்ளி மருத்துவமனை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>