×

சீனாவைத் தொடர்ந்து இந்திய சேனல்களுக்கு தடை விதித்தது நேபாள அரசு : தங்களது அரசுக்கு எதிராக தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக புகார்

காத்மண்டு : இந்திய சேனல்கள் நேபாள அரசுக்கு எதிராக தவறான செய்திகளை ஒளிபரப்புவதாக கூறி தூர்தர்ஷன் தவிர மற்ற அனைத்து சேனல்களுக்கும் தடை விதித்து நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தடை இன்று மாலையில் இருந்து அமலுக்கு வர உள்ளது.  சமீப காலமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை நேபாள அரசு எடுத்து வருகிறது. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய வரைப்படத்தை தயாரித்த பிரதமர் ஒலி தலைமையிலான அரசு, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

*பிரதமர் பதவியில் இருந்து தம்மை வெளியேற்ற இந்தியா திட்டமிடுவதாக சமீபத்தில் பிரதமர் ஷர்மா ஒலி குற்றம் சாட்டி இருந்தார். எதிரணியினரை ஆட்சியில் அமர வைக்க இந்திய அரசு சதி செய்வதாகவும் ஒலி தெரிவித்து இருந்தார்.

*மேலும் எல்லைப்பகுதிகளில் சாலை அமைக்கக்கூடாது என நேபாளம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதுதவிர கொரோனா தங்களது நாட்டில் பரவ இந்தியா தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டியது.

*இதனைத்தொடர்ந்து இந்திய அரசுக்கும் நேபாள அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

*இந்நிலையில் தற்போது நேபாள அரசு அந்நாட்டில் தூர்தர்சனை தவிர பிற அனைத்து இந்திய சேனல்களையும் முடக்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் செய்தி மற்றும் தொடர்புத் துறை அமைச்சர் யுபராஜ் காதிவாடா கூறுகையில்,இந்திய ஊடகங்கள் நேபாள அரசின் இறையாண்மையையும் கண்ணியத்தையும் தாக்குகின்றன. நேபாள அரசு அரசியல் மற்றும் சட்ட தீர்வுகளை நாடும்,என்று கூறினார்.

*ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக நேபாள அரசிடம் இருந்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

*இதனிடையே இந்தியாவுக்கு எதிரான நேபாள பிரதமரின் நிலைப்பாட்டிற்கு ஆளும் நேபாள கம்பியூனிஸ்ட் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உள்நாட்டு பிரச்சனைகளை திசை திருப்ப நட்பு நாடான இந்தியா மீது வீண் பழி சுமத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பிரதமர் ஷர்மா ஒலி, பதவி விலக வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : govt ,Nepal ,Indian ,China ,Government of Nepal ,government , China, Indian, Channels, Prohibition, Government of Nepal
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது