உணவகங்கள், அழகு நிலைய உரிமையாளர்களுடன் ஆலோசனை அரசு நிபந்தனைகளை மீறினால் அபராதம்: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப் பிடிப்பது தொடர்பான உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் அபராதம் வசூலிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார். பொதுமக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் அழகு நிலையங்கள் நடத்துபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், அரசால் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு வழிகாட்டுதல்களை முழுமையாக கடைப்பிடிப்பது தொடர்பாக அதன் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

பின்னர் ஆணையர் பிரகாஷ் பேசுகையில்: அனைத்து உணவகங்கள், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட அனைவரும் ஆறு அடி இடைவெளியுடன் கூடிய சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உணவகங்கள், அழகு நிலையங்கள் முகப்பு வாயிலில் கண்டிப்பாக கைகளை கழுவுவதற்கு ஏதுவாக கிருமி நாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் உணவங்கள்,அழகு நிலையங்களிடம் அதற்கான அபாரதத் தொகை வசூலிக்கப்படும் என்றார். இக்கூட்டத்தில் துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>