வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளர் ஓட ஓட விரட்டி படுகொலை: வாலிபர் கைது

குன்றத்தூர்: வாடகை பாக்கி கேட்டு தகராறு செய்த வீட்டு உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை சேர்ந்தவர் குணசேகரன் (50). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவருக்கு சொந்தமாக குன்றத்தூர் பண்டார தெருவில் வீடு உள்ளது. அதனை, சென்னையில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் அஜித் (21) என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, அஜித் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால், போதிய வருமானமின்றி தவித்த அவர், கடந்த 4 மாதமாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி குணசேகரன் பலமுறை கேட்டும், அஜித் வாடகையை கொடுக்காமல், காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குணசேகரன், குன்றத்தூர் சென்றார். அங்கு, அவரது குடும்பத்தினரிடம் வாடகை பணத்தை உடனே தர வேண்டும். இல்லாவிட்டால், வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறினார். அதற்கு, ஊரடங்கு அமலில் உள்ளதால், உடனடியாக வீட்டை காலி செய்ய முடியாது என அஜித் கூறியுள்ளார். இதில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த அஜித், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து, குணசேகரனை சரமாரியாக வெட்டினார். வலியை தாங்க முடியாமல் அலறிதுடித்த அவர், அங்கிருந்து தப்பியோடினார். ஆனாலும் அஜித், அவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த கொலை சம்பவத்தை கண்டு, அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.

தகவலறிந்து குன்றத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த அஜித்தை கைது செய்தனர்.

வீட்டு வாடகை கேட்ட உரிமையாளரை, வாலிபர் ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில் வீட்டு வாடகை கேட்கக் கூடாது என்று சமீபத்தில் தமிழக அரசும், நீதிமன்றமும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>