×

தூய்மை பணியாளர் உட்பட கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலி

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தூய்மை பணியாளர் உட்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். திருக்கழுக்குன்றம் மாதவன் நகரை வசித்த 35 வயது வாலிபர், திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இருமல், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவருக்கு பரிசோதனை செய்ததில், கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், மதுராந்தகம் அடுத்த பழமத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். பேரூராட்சி அலுவலக தூய்மை பணியாளர் கொரோனாவுக்கு பலியானதால், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் கடும் பீதியடைந்துள்ளனர். அதேப்போல், திருக்கழுக்குன்றம் தேசுமுகிப்பேட்டையை சேர்ந்த 65 வயது முதியவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரும், பழமத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

மதுராந்தகம்: மதுராந்தகம் சுமங்கலி நகர், வெங்கடேச நகர், பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 2 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 7 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நேற்று கொரோனா பாதிக்கப்பட்ட 7 பேருடன் சேர்ந்து, மதுராந்தகம் நகராட்சியில் மொத்தம் 109 பேர் என பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை ஒட்டியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதைதொடர்ந்து அப்பகுதிகளில் மட்டும் ஊரடங்கு அதிக கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனல், பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி பகுதியில் கடந்த மார்ச் மாதம் 2 என இருந்த தொற்று படிப்படியாக அதிகரித்து ஜூலை 8 தேதியில் 300க்கும் மேலாக அதிகரித்துவிட்டது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2 ஆக இருந்த கொரோனா தொற்று மே மாதம் 75 ஆகவும், ஜூன் மாதம் 294 எனவும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், இந்த எண்ணிக்கை 300 ஐ கடந்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் நகராட்சி பகுதியில் மேலும் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர் உள்பட 2 பேர் இறந்தனர். இதை தொடர்ந்து பேரூராட்சியில் வேலை பார்க்கும் அனைத்து தூய்மை பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என சுமார் 105 பேருக்கு சுகாதார துறை மூலம் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேப்போல், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி திருப்பூர் குமரன் நகர், ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் 2 பேர், திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதியில் 12 பேர், திருப்போரூர் பேரூராட்சியில் 2 பேர், திருப்போரூர் ஒன்றிய அளவில் 10 பேர் என 26 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

Tags : Cleanliness employee, corona infection, 2 people, kills
× RELATED 7 பேர் விடுதலை எப்போது?: ஜெயின் கமிஷன்...