சொகுசு விடுதி திறப்பு விழாவில் காபரே உக்ரைன் அழகிகளுக்கு கேரள போலீஸ் வலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் ராய் குரியன். பிரபல தொழிலதிபரான இவருக்கு இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகளும், சொகுசு விடுதிகளும் உள்ளன. இந்நிலையில் மூணாறு அருகே இவருக்கு சொந்தமான புதிய கல்குவாரி மற்றும் சொகுசு விடுதி திறப்பு விழா கடந்த மாதம் நடந்தது. இந்த கல்குவாரியை கேரள மின்துறை அமைச்சர் மணி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்று இரவு சொகுசு விடுதியில் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டது. இதில் உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் பெண்களின் காபரே மற்றும் பெல்லி டான்ஸ் நிகழ்ச்சியும் நடந்தது.

இரவு 8 மணிக்கு தொடங்கிய நடன நிகழ்ச்சி அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதில் போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது இதுபோன்ற விழாக்கள் நடத்தவும், 50க்கு மேற்பட்டோர் கூடும் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொகுசு விடுதியில் நடந்த காபரே டான்ஸ் வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவியது.

இதையடுத்து இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேசன் சட்டப்படி நடவடிக்கை எடுக்க எஸ்பி கருப்பசாமிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சாந்தன்பாறை போலீசார் 47 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் காபரே நடனமாடிய உக்ரைன் நாட்டை சேர்ந்த இளம் பெண்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே விதிமுறைகளை மீறி நடன நிகழ்ச்சி நடந்த சொகுசு விடுதிக்கு சாந்தன்பாறை பஞ்சாயத்து நிர்வாகம் சீல் வைத்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories:

>