×

ஓமன், சவூதி, அமெரிக்காவில் சிக்கி தவித்த 604 இந்தியர்கள் மீட்பு

சென்னை: ஓமன், அமெரிக்கா, சவுதி அரேபியா நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களில் 604 பேர் மீட்கப்பட்டு, 3 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் நகரிலிருந்து 179 இந்தியர்களுடன் ஏர்இந்தியா சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 81 பேர் இலவச தங்குமிடமான மேலக்கோட்டையூர் தனியார் கல்வி நிறுவனத்திற்கும், கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான ஓட்டல்களுக்கு 98 பேரும் அனுப்பப்பட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 169 இந்தியர்களுடன் ஏர்இந்தியா சிறப்பு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்தது. இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இலவச தங்குமிடம் கேட்ட 10 பேர் தண்டலம் தனியார் கல்வி நிறுவனத்திற்கும், கட்டணம் செலுத்துபவர்கள் சென்னை நகரில் உள்ள ஓட்டல்களுக்கும் அனுப்பப்பட்டனர்.
இதுபோல, சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலிருந்து 256 இந்தியர்களுடன் சவுதி அரேபியன் சிறப்பு விமானம் நேற்று காலை 8 மணிக்கு சென்னை வந்தது. இவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்.

அந்த நிறுவனங்களே இந்திய அரசின் அனுமதி பெற்று தனி சிறப்பு விமானத்தில் இந்தியாவிற்கு அழைத்து வந்தது. இவர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனையோ, அரசின் இலவச தங்குமிடங்களோ கிடையாது. அனைவரும் சென்னை நகர ஓட்டல்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த அனுப்பப்பட்டனர். ஓட்டல்களில் தனியார் மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்துவார்கள். இதை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : US ,Oman ,Rescued 604 Indians ,Saudi , Oman, Saudi, USA, 604 Indians, Rescue
× RELATED சார்ஜா, ஓமன் நாடுகளில் தவித்த 317 இந்தியர்கள் மீட்பு