×

சவால்களில் இருந்து இந்தியாமீண்டு வந்த சரித்திரம் உள்ளது: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘சமூகம் அல்லது பொருளாதாரம் எந்த சவாலாக இருந்தாலும் இந்தியா அதில் இருந்து மீண்டு வந்துள்ளதற்கான வரலாறு உள்ளது’ என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்தியா குளோபல் வீக் மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டின் துவக்க விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: பசுமையான பொருளாதார மறுமலர்ச்சியை இந்தியாவில்  பார்க்க முடிகின்றது. உலகிலேயே இந்தியா மிகவும் வெளிப்படையான பொருளாதாரம் கொண்ட நாடு.

சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து முதலீடு செய்யவும் தொழில் தொடங்கவும் சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகின்றது. இந்தியா இன்று வழங்கும் இதுபோன்ற வாய்ப்புக்களை ஒரு சில நாடுகள் மட்டுமே செய்யும். சாத்தியமற்றது என நம்பப்படுவதை கூட சாதிக்கும் வல்லமை படைத்தவர்கள் இந்தியர்கள் சமூகம், பொருளாதார பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து இந்தியா மீண்டு வந்ததற்கான வரலாறு உள்ளது.  கொரோனாவுக்கு எதிராக வலுவான போரை நாடு நடத்தி வருகின்றது. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் மற்ற நாடுகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

* வாரணாசிக்கு பாராட்டு
தனது சொந்த தொகுதியான உபி மாநிலம் வாரணாசியில் கொரோனா நிவாரண பணிகளில் ஈடுபட்ட தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர், கொரோனா நோய் தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர்கள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மோடி பேசுகையில், ‘‘உத்தரப்பிரதேசத்தில் சுமார் 23-24 கோடி மக்கள் தொகை உள்ளனர். எவ்வாறு கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொள்வார்கள் என்ற சந்தேகமும், அச்சமும் நிலவியது. மக்களின் கடின உழைப்பு மற்றும் அவர்களது ஒத்துழைப்புடன் கொரோனா அச்சத்தில் இருந்து அவர்கள் வெளிவந்துள்ளனர்” என்றார்.

Tags : India , Challenge, India, History, Prime Minister Modi talk
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...