×

கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழப்பு: பெற்றோர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்கள்

கோவை: கோவையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்காநல்லூர் அருகே ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமி கழுத்தில், துண்டு இறுகி உயிரிழந்தார். நீளிக்கொணம்பாளையத்தை சேர்ந்த அருள்ஞான ஜோன்ஸ்-நிஷா தம்பதியினரின் மகள் ஜெர்லின் நேகா(9), ஊஞ்சல் கட்டும் செயினில் துணியை கட்டி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது துணி கழுத்தை இறுக்க சம்பவ இடத்திலேயே சிறுமி மயக்கமாகியுள்ளார். உடனே அவரை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கோவை ஒண்டிப்புதூரில் 2 அடுக்கு கட்டிலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த 9 வயது சிறுமி பவதாரணி, தவறி விழுந்த பென்சிலை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளார். 2 அடுக்கு கட்டிலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் சிறுமியின் தலையில் ரத்தம் உறைந்துள்ளது. 2 நாட்களுக்கு பிறகு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : girls ,game ,Parents ,Coimbatore , Coimbatore , children, death, singanallur
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்