×

ஊரடங்கு பிறப்பித்த அதிபருக்கு எதிராக செர்பியாவில் போராட்டம்..: வன்முறையாக மாறியதால் பலர் படுகாயம்!

பெல்கிரேட்: செர்பியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் செர்பியாவின் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,51,976 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 12,162,680 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7,029,521 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 58,324 பேர்  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், செர்பியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த அதிபருக்கு எதிராகத் திரண்ட மக்கள் செர்பியாவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடியை தவறாக கையாண்டதாக குற்றம்சாட்டி, அதிபர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். குறிப்பாக தலைநகர் பெல்கிரேடில் அமைதியாகத் தொடங்கிய இப்போராட்டம் வன்முறையாக மாறியது.

போலீசாரை நோக்கி கற்களையும், பாட்டில்களையும் வீசி எறிந்த போராட்டக்காரர்களை சமாளிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அப்போது ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். ஊரடங்கு அறிவிப்பிலிருந்து அதிபர் பின்வாங்கிய பின்னும் போராட்டங்கள் இரவிலும் தொடர்ந்ததால் செர்பிய நகரங்களில் பதற்றம் நிலவி வருகிறது. ஏழு மில்லியன் மக்கள் வாழும் நாடான செர்பியாவில் 16 ஆயிரத்து 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் 330 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது, குறிப்பாக செவ்வாய்க்கிழமை மட்டும் 299 புதிய நோயாளிகளும் 13 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Serbia ,Virus Unrest ,Europe , Curfew, President, Serbia, protest, violence
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!