×

கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!: கல்லறை தோட்டத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்..ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டு வருகிறது. காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த 33 வயதான அருண்குமார் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய தன்னார்வலர்கள் மூலமாக ஈரோடு கிண்டிபாளையம் பகுதியில் இருக்கக்கூடிய கல்லறை தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. கவச உடை அணிந்து முறைப்படி அவரை அடக்கம் செய்வதற்கான குழிகள் தயார் நிலையில் இருந்தது.

இந்தகவலை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கொரோனா பாதித்தவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த தன்னார்வலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலையை மறித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கல்லறை தோட்டத்தின் பிரதான வாயில் வழியாக உடலை எடுத்து செல்லாமல் பின்பக்கமாக சுவர் ஏறி குதித்து தன்னார்வலர்கள் அந்த உடலை எடுத்து சென்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒருசிலர் கற்களை எடுத்து அங்குள்ள ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததால், அவர்கள் வெளியேற்றிவிட்டு உடலை அடக்கம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, கல்லறை தோட்டத்தின் வாயிலில் நின்ற 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீசாருடன் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடல் அடக்கம் செய்யும் நிகழ்வு முடிவுற்ற போதிலும் சடலத்தை இப்பகுதியில் புதைக்க கூடாது, உடனடியாக வேறொரு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.

Tags : Coroner ,death ,burial , Coroner's death to protest burial: public debate over grave estate
× RELATED வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க...