×

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஒத்திவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு செய்யகோரிய வழக்கு ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இளநிலை மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு இருப்பது போலவே முதுநிலை மருத்துவ படிப்பிலும் நீட் தேர்வு உள்ளது. நீட் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பது இல்லை, அங்கு இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதும் இல்லை. இதுவரை பல ஆயிரம் இடங்களை இப்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்துள்ளனர். இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை. மருத்துவ படிப்பில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக தொடர்ந்து சர்ச்சை எழுந்து வருகிறது.

 இதற்கிடையே, முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது எனக்கூறி மனுவை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக, மதிமுக, நாம் தமிழர், இடதுசாரி கட்சிகள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

இந்த வழக்கின் போது வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என மத்திய அரசு கோரியிருந்தது. மேலும் அவசரம் பொருந்தி வழக்கை விரைந்து விசாரிக்க அதிமுக, திமுக தரப்பில் கோரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு ஜூலை 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்திலும் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Postponement of 50% reservation case for medical students
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...