×

கென்யா நாட்டில் மலைக்கிராமங்களுக்கு இணைய வசதி தரும் பிரம்மாண்ட பலூன்கள்: புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆல்ஃபாபெட் நிறுவனம்..!!

நைரோபி: கென்யா நாட்டில் கிராமங்களுக்கு இணைய வசதி தரும் பிரம்மாண்ட பலூன்கள் மூலம் புதுமையான திட்டத்தை கென்யாவில் ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கென்யாவில் நகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செல்போன் கோபுரங்கள் மூலமாக இணைய சேவை எளிதாக கிடைத்துவிடும். சமதளபகுதி என்றாலும் செல்போன் கோபுரங்கள் அமைப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால் மலைக்கிராமங்கள், பள்ளத்தாக்கு பகுதிகளில் செல்போன் கோபுரங்கள் அமைப்பது மிகவும் கடினமான விஷயமாகும்.

செல்போன் கோபுரம் அமைத்தாலும் அது அதிக செலவை உண்டாக்கும். இதனால் அது போன்ற பகுதிகளில் பிரம்மாண்ட பலூன்கள் மூலம் இணைய வசதியை கிடைக்கச் செய்வர். அப்படி பிரம்மாண்ட பலூன்கள் மூலம் கிராமங்களுக்கு இணையதள வசதி தரும் திட்டத்தை கென்யாவில் ஆல்ஃபாபெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பிரம்மாண்ட பலூன்கள் மூலம் உலகளவில் பலூனை பயன்படுத்தி வர்த்தக ரீதியில் அதிவேக இணைய வசதி தரும் முதல் திட்டம் இதுவாகும். பலூனில் உள்ள தொலைத் தொடர்பு கருவி மூலம் கென்யாவின் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் கிராமத்தவர்கள் இணையதள வசதி பெறுவார்கள். இதற்கு முன் இணையதள வசதி தேவைப்படும் இப்பகுதி மக்கள் சுமார் 60 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டியிருந்த நிலையில் தற்போது அதை வீட்டிலிருந்தே பெற முடியும் என்பது சாதனைக்குரிய விஷயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kenyan , Alphabet launches innovative program for Kenyan people
× RELATED ரூ.2.88 கோடி தங்கம் கடத்தல் 2 பெண்கள் கைது