×

நெல் கொள்முதல் மையத்தை மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்: விவசாய சங்க கூட்டமைப்பு கலெக்டரிடம் மனு

மதுரை: நெல் கொள்முதல் மையத்தை மூடக்கூடாது, மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பெரியாறு - வைகை திருமங்கலம் பாசன கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் ராமன் உள்ளிட்ட விவசாயிகள், கலெக்டர் வினய்யிடம் நேற்று மனு அளித்தனர்.  அந்த மனுவில் கூறியிருப்பதாவது: உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், சொக்கத்தேவன்பட்டி, செல்லம்பட்டி, வின்னக்குடி, அய்யனார்குளம் உள்ளிட்ட 9 கிராம பகுதிகளில் கோடை நெல் அறுவடைக்காக 21 நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது, உசிலம்பட்டி, பேரையூர், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் ஆகிய கிராம பகுதிகளில் இருந்து கோடையில் அறுவடை செய்த நெல்லை, விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

தற்போது அறுவடை அதிகமாக நடக்கிறது. மேலும் நெல் வரத்தும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், கொள்முதல் மையங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செய்து வருகிறது. செல்லம்பட்டி பகுதியில் மட்டும் 15 ஆயிரம் ஏக்கர் நெல் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. இது, தஞ்சை டெல்டா பகுதி போன்று தான் நடக்கிறது. அதனால், நெல் கொள்முதல் மையத்தை மூடக்கூடாது. மேலும் 20 நாட்களுக்கு கொள்முதல் மையத்தை திறந்து, விவசாயிகளிடம் அறுவடை நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், இந்த கோடை நெல்லை விவசாயிகள் விற்க முடியாத நிலை ஏற்பட்டு, கடும் பாதிப்பை  ஏற்படுத்தும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.


Tags : Rice ,procurement center ,Paddy ,collector , Rice Procurement Center, Federation of Agricultural Societies, Collector
× RELATED முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோடி: பழ.நெடுமாறன்