×

மேலூர் பகுதியில் சேதமான பெரியாற்று கால்வாயை சீரமைப்பது எப்போது ? பல இடங்களில் சிலாப்களை காணோம்

மேலூர்: மேலூர் தாலுகா அளவில் பல கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரூ.50 ஆயிரம் செலவு செய்யப்பட வேண்டிய கண்மாய்களுக்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்ததாக கூறி அரசுப் பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து பணிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அந்தகண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டிய கால்வாய்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆண்டுதோறும் பெரியாறு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு பொதுப்பணித்துறை நிர்வாகம் பெரிய கால்வாய், வரத்து கால்வாய்களை சீர்செய்ய வேண்டியது வழக்கம்.

ஆனால் தண்ணீர் திறப்பது வரை சும்மா இருந்து விட்டு, தண்ணீர் வருவதற்கு இரு தினங்களுக்கு முன்பு பெயரளவிற்கு பணிகளை செய்துவிட்டு, அனைத்து மராமத்து பணிகளும் முடித்துவிட்டதாக கணக்கை மட்டும் காட்டிவிடுவது வழக்கம். ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலை உள்ளதால், தற்போதே மராமத்து பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும்.   புலிப்பட்டியில் இருந்து மேலூர் வரும் பெரியாற்று கால்வாயில் எட்டிமங்கலம், அக்ரஹாரம், சிலோன் காலனி என பல இடங்களிலும் சிலாப்கள் பெயர்ந்து உள்ளது. அதேபோல் தான் கல்லம்பட்டி வழியாக மேலூர் செல்லும் கிளை வாய்க்காலின் நிலையும் உள்ளது.

  இக்கிளை கால்வாயில் பலஇடங்களில் சிலாப் காணாமல் போய் உள்ளதுடன், பலஇடங்களில் கால்வாயில் மண் மேடாக மாறியுள்ளது. இத்துடன் கல்லம்பட்டி வடக்கு தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் நேரடியாக கால்வாயிலேயே விடப்பட்டுள்ளது.
வடக்கு தெருவில் உள்ளவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப கால்வாயை கடந்து செல்வதற்கு மரப்பலகை, இரும்பு என குறுக்கில் போட்டு வைத்துள்ளனர். இதில் ஒருவர் ஒருபடி மேல் சென்று மின்சார மின்கம்பங்களை கால்வாயின் குறுக்கில் போட்டு தனது வீட்டிற்கு செல்ல வழி ஏற்படுத்தியுள்ளார்.
  இது குறித்து எட்டிமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஸ்டாலின் கூறியதாவது: ஆண்டுதோறும் பொதுப்பணித்துறையினர் கால்வாய்களை மராமத்து பார்ப்பதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அதை அவர்கள் முறையாக பயன்படுத்தியதே கிடையாது.

அணையில் இருந்து தண்ணீரை திறப்பதற்கு முன்பு கால்வாய்களில் உள்ள சேதங்களை சரிசெய்ய வேண்டும். வரத்து கால்வாய்களை சீர்செய்ய வேண்டும். தண்ணீர் கால்வாயில் வருவதற்கு முதல் நாளில் பெயரளவிற்கு ஜேசிபியை கொண்டு குப்பைகளை மட்டும் வாரி வெளியில் போட்டால் போதாது. சிலாப்கள் சேதமாகி இருப்பதால், விடப்படும் தண்ணீர் வீணாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகளே அதிகம் பாதிக்கப்படுவர். இதனால் கண்துடைப்பாக வேலை செய்யாமல் முறையாக அதிகாரிகள் பணியை செய்ய வேண்டும். குடிமராமத்து பணிகளில் அதிகமாக பணம் சுருட்ட முடியும் என்பதால், அதற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வேண்டிய கால்வாய்க்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என கூறினார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா ?


Tags : canal ,Melur ,area ,chilab ,places , Melur, Periyarthu Canal, Chilaws
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்