×

இயற்கை முறையில் பந்தல் அமைத்து காய்கனிகள் பயிரிடும் விவசாயி

ரிஷிவந்தியம்: இயற்கை முறையில் பந்தல் அமைத்து காய்கனிகளை பயிரிடுவதில் ரிஷிவந்தியம் பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்தி அதிக அளவில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இக்காய்கறிகளை உணவுக்கு பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாக கூறப்படுகிறது. ஆனால் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் காய்கறிகளை விளைவிக்கின்றனர். ரிஷிவந்தியம் அடுத்த நாகல்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இயற்கை முறையில் பந்தல் அமைத்து பாகற்காய், சுரைக்காய், கோவக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நாகல்குடியை சேர்ந்த மூர்த்தி மனைவி விஜயா கூறியதாவது: இம்முறையில் பயிரிடும் நிலத்தை நன்றாக உழவு செய்து பதப்படுத்த வேண்டும். ஒரு செடிக்கு 8 அடி இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். இதற்கு அரை ஏக்கரில் பயிரிட நில பராமரிப்பு, இயற்கை உரம் ஆகியவற்றுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.அதைத்தொடர்ந்து 30வது நாளில் பந்தலில் ஏற்றி விடுவதோடு 40வது நாளிலேயே காய்ப்புக்கு வரும். அதையடுத்து நாள்தோறும் 80 கிலோ முதல் 100 கிலோ வரையில் அறுவடை செய்யலாம். இயற்கை முறையில் பயிரிடுவதால் கொடியும் சேதமின்றி பந்தலில் பாதுகாப்பான முறையில் படரும்.

அத்துடன் காய்கனிகளில் சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படாது. நிழல் படர்ந்த நிலையில் இருப்பதால் விளைநிலம் ஈரத் தன்மையுடன் காணப்படும். அதிக தண்ணீரும் செலவாகாது. இதேபோல் சுரக்காயையும், பீர்க்கங்காயையும் சாகுபடி செய்யலாம். இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் காய்கனிகளுக்கு சந்தையில் நல்ல விலையும் கிடைக்கிறது. இதுபோன்ற காரணங்களால் பாதுகாப்பான முறையில் பந்தல் அமைத்து மேற்குறிப்பிட்ட காய்கனிகளை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருவதாக அவர் தெரிவித்தார். இயற்கை முறையில் பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு மானிய தொகையை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Nature, Vegetables, Farmer
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை