×

குடும்பங்களில் தாண்டவமாடும் வறுமை ஊரடங்கால் தொழிலாளர்களாக மாறி வரும் பள்ளி மாணவர்கள்: ஆண்கள் உடையில் சுக்கு காபி விற்கும் மாணவி

கிருஷ்ணகிரி: கொரோனாவின் கோரத்தாண்டவம் ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களின் வாழ்க்கையை சிதைத்துள்ளது. தொழில் முடங்கி, வருவாய் இழந்து வயிற்றுப்பசி போக்கவே, பல குடும்பங்கள் திண்டாடி வருகிறது. அதிலும் சிறு தொழில்கள் செய்து, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டும் பல குடும்பங்கள், நிர்கதியாய் நிற்கிறது. இதில் பள்ளி மாணவர்கள் பலரும், குடும்பபாரம் சுமப்பதற்கு தங்கள் பெற்றோருக்கு துணையாக களமிறங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தற்போது நீண்ட விடுமுறையில் இருப்பதால் பலகாரம் விற்பது, பூக்கள் கட்டுவது, சூளைகளுக்கு வேலைக்கு செல்வது என்று பல்வேறு நிலைகளில் தொழிலாளர்களாக  மாறி வருகின்றனர்.

இந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7ம்வகுப்பு மாணவி ஒருவர், மாணவர்களை போல உடையணிந்து சுக்கு காபி விற்பதும், அதற்கான காரணமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி புதுப்பேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர் 6ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இவருக்கு மனைவியும், 3பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். குடும்பத் தலைவனின் இறப்பு இந்த குடும்பத்தை நிர்க்கதியாக்கியது. கையில் கிடைக்கும் சிறிய வேலைகளை செய்து பிழைப்பு ஒட்டிய இந்த குடும்பத்திற்கு கொரோனா ஊரடங்கு, பேரிடியாய் மாறி உள்ளது.

தற்போது 7ம்வகுப்பு படிக்கும் இளையமகளிடம் சுக்குகாபி தயாரித்து கொடுத்து விற்றுவர அனுப்புகிறார். ஆண்கள் போல உடையணிந்து, அந்த மாணவி சுக்குகாபி விற்று வருகிறார். வருமானம் வேண்டும் என்பதோடு, மகளின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதால் ஆண்கள் போல,  கிராப் வெட்டி உடையணிந்து செல்கிறாள்’,’ என்று நெகிழ்கிறது தாயுள்ளம். வறுமையில் வாடும் தங்களுக்கு அரசு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் என்பதும் இவர்களின் கோரிக்கையாக உள்ளது. இதே போல் நுங்கு விற்கும் மாணவர், சமோசா விற்கும் மாணவர் என்று தினமும் பலர், தொழிலாளர்களாக அவதாரம் எடுத்து வருகின்றனர்.

இது குறித்து சமூக மேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் பரவலும், தொடரும் ஊரடங்கும் ஏழை குடும்பங்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு சிதைத்துள்ளது. அரசு கொடுக்கும் இலவச ரேஷன் அரிசியை வாங்கி சாப்பிட்டாலும் இதர காய்கறி, மளிகை பொருட்கள், வீட்டு வாடகை, மின்கட்டணம் என்று  கழுத்தை நெரிக்கும் செலவுகள் ஏராளமாக உள்ளது. பெரியவர்கள் சிறிய அளவிலான வியாபாரத்திற்கோ, அல்லது வேலைகளுக்கோ செல்லும் போது போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் சிறுவர்கள் இது போன்ற வேலைகளுக்கு செல்லும் போது, எச்சரித்தாலும் கனிவோடு அனுப்புகின்றனர்.

இதனால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர், தற்போது தொழிலாளர்களாக உருவெடுத்து நிற்கின்றனர். வீட்டில் அடைபட்டு கிடப்பதை விட, பெற்றோருக்கு உதவியாக இருப்பதோடு, தனக்கும் ஒரு புதுஅனுபவமாக இருப்பதால், மாணவர்கள் இதற்கு மறுப்பு சொல்வதில்லை. அதே நேரத்தில் இது போன்ற தொழில்கள், அவர்களுக்கு படிப்பின் மீதுள்ள நாட்டத்தை குறைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது,’’ என்றனர்.


Tags : Schoolgirls ,families ,student , Families, curfews, workers, schoolchildren, men and women
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....