×

பண்ணாரி சோதனைச்சாவடியில் பரபரப்பு: பொறுப்பேற்ற 2வது நாளே லஞ்ச வசூலில் ஈடுபட்ட பெண் அதிகாரி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

சத்தியமங்கலம்: பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் பொறுப்பேற்ற 2வது நாளே பெண் அதிகாரியின் தலைமையில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக-கர்நாடக எல்லையில் பண்ணாரி அம்மன் கோயில் அருகே இரு மாநில எல்லையில் வட்டார போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் வனத்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இச்சாலை வழியாக தமிழகம், கர்நாடகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு லாரி போக்குவரத்து நடந்து வருகிறது.

சரக்கு லாரிகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுகிறதா?, முறையான ஆவணங்கள் உள்ளனவா? என்பது குறித்து சோதனையிட்டு வாகனங்களை அனுமதிப்பது வழக்கம். அதிக பாரம் ஏற்றி சோதனைச்சாவடியை கடந்து செல்லும் வாகன டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வட்டாரப் போக்குவரத்து சோதனைச்சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேம ஞான குமாரி, அலுவலக உதவியாளர் முனியப்பன் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞான குமாரி சென்னையிலிருந்து பணி மாறுதலாகி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் லாரி டிரைவர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் சோதனைச்சாவடி பணியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞான குமாரி ஒரு லாரி டிரைவரிடம் லஞ்சமாக ரூ.3 ஆயிரம் கேட்பதும், டிரைவர்கள் பணம் கொடுத்துவிட்டு அதற்கு எழுதி தர முடியுமா? என கேட்பது பதிவாகியுள்ளது. லஞ்சம் வாங்கிய அலுவலக உதவியாளர் முனியப்பன், லஞ்சமாக பெறும் பணத்திற்கு எழுதி தர முடியுமா? என கூறுவிட்டு, 10 சக்கர லாரியா?

அல்லது 12 சக்கர லாரியா? என விசாரிப்பதும், அதற்கு தகுந்தாற்போல் லஞ்சம் வாங்குவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு மாநில எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் வாகன ஓட்டுனர்களிடம் லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : bribery officer , Bannari checkpoint, bribery
× RELATED ஆந்திரா, தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்பு...