×

தூத்துக்குடி அருகே குளத்தூர் பகுதியில் சிப்காட்டிற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் எடுப்பு: பொதுமக்கள் எதிர்ப்பு

குளத்தூர்: தூத்துக்குடி குளத்தூர் அருகே சிப்காட்டிற்காக ஆயிரம் ஏக்கர் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரையடுத்த வைப்பார் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது துலுக்கன்குளம் கிராமம். வைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராம மக்கள் பலர் வாழ்வாதாரமாக கடல் பகுதியோரம் உள்ள 100 ஏக்கருக்கும் மேற்பட்ட புறம்போக்கு நிலங்களில் உப்பள பாத்திகள் அமைத்து உப்பு வாரும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது இக்கிராம மக்களின் முன்னோர் ரூ.1 கப்பம் கட்டி உப்பளம் அமைத்து அதிலிருந்து உப்புகளை வாரி அருகிலுள்ள கிராமங்களுக்கு சுமந்து சென்று விற்றனர்.

சுதந்திரத்துக்கு பின்னர் அரசுக்கு வரிப்பணம் செலுத்தி ரசீது பெற்று உப்பள பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் துலுக்கன்குளம் கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சர்வே எண் 989ல் சுமார் 1129 ஏக்கர் நிலத்தை சிப்காட்டிற்காக அரசு கையகப்படுத்த முடிவு செய்தது. இதற்காக அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உப்பளங்களை அகற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் இருமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் சிப்காட்டிற்காக தங்கள் உப்பளங்களை அகற்றினால் வாழ்வாதாரம் பறிபோவதாக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இது தொடர்பாக தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

 இந்நிலையில் துலுக்கன்குளம் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடங்களில்  ஆக்கிரமிப்புகளை அகற்றி சிப்காட்டிற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று அதிரடியாக நடந்தது. இதில் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் சரவணப்பெருமாள், ஆர்ஐ பாக்கியராஜ், தலைமை நில அளவையர் வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 8க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி மீட்டனர்.  பாதுகாப்பிற்காக விளாத்திகுளம் டிஎஸ்பி பீர்முகைதீன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பத்மனாபபிள்ளை, ராமலட்சுமி, கலா மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே துலுக்கன்குளம் கிராம மக்கள் தங்கள் உப்பளங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘வருடத்திற்கு குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே உப்பளங்களில் உற்பத்தி நடக்கும். எங்கள் உப்பளங்களில் வாரத்திற்கு 3 முதல் 6 டன் வரை கிடைக்கும் உப்பின் மூலம் ரூ.4 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் குடும்ப செலவுக்கு போதாத நிலையில் வெளியூர்களுக்கு கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தையும் கொண்டே குடும்பம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் எங்கள் வாழ்வாதாரத்தை நசுக்கி பெரிய முதலாளிகள் தொழிற்பேட்டை அமைக்கும் விதமாக அரசு இப்பகுதி நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இதனால் எங்கள் வாழ்வாதாரம் அடியோடு பாதிப்புக்குள்ளாகி எதிர் காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு இந்த முயற்சியை கைவிட்டு மீண்டும் இந்நிலங்களில் உப்பளம் அமைக்க முறையாக பட்டாவோடு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர். உப்பள உரிமையாளர்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் சுமார் 157 ஹெக்டர் நிலத்தில் 30 வருடத்திற்கு மேலாக 12க்கும் மேற்பட்டோர் உப்பளங்களை அமைத்து தொழில் செய்து வருகிறோம். சிப்காட்டிற்காக அரசு இப்பகுதி நிலங்களை கையகப்படுத்த கடந்த ஆண்டு இறுதியில் அதற்கான பணிகளை துவக்கியது.

எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தோம். அதில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கலெக்டர் நாங்கள் அளித்த மனுக்களுக்கு இதுவரை பதில் தரவில்லை. இந்நிலையில் தற்போது திடீரென அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது’ என்றனர்.

Tags : land ,Klathoor ,protest ,area ,Chipkat ,Thoothukudi , Thoothukudi, Klathoor, Chipkat, Public
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!