×

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் மேலும் மூன்று முதுமக்கள் தாழிகள்

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூர் அகழாய்வில்  புளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகே ஒரே குழியில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. உலக நாகரீகத்தின் தொட்டில் எனப்படும் தூத்துக்குடி மவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி மாநில அரசு சார்பில் அகழாய்வு பணி துவங்கியது. தொடந்து 40 நாள்களாக ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. தொல்லியல் இயக்குநர் பாஸ்கர் மற்றும் லோகநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40க்கு மேற்பட்ட குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வித்தியாசமான பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

கடந்த 8ம் தேதி 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் மற்றும் 2 கை மூட்டு எலும்புகளும், அதன் பின்னர் ஒரு முதுமக்கள் தாழியும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை 15க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே சிவகளையிலும் இதுவரை 20க்கு மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.கடந்த 28 ம் தேதி சிவகளையில் வாழ்விடங்களை தேடி சாமியாத்து சாலையில் உள்ள திரட்டில் அகழாய்வு பணியை துணை இயக்குநர் சிவானந்தம் துவக்கி வைத்தார். அகழாய்வு இயக்குநர் பிரபாகரன், தொல்லியல் ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் கொண்ட குழுவினர் விரைவாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்களின் வாழ்விடங்களை கண்டறிவதற்காக ஆதிச்சநல்லூர் ஊரின் மையப்பகுதிகளில் உள்ள இடங்களில் 5 குழிகள் புதிதாக அமைத்து ஆய்வு பணி நடந்து வருகிறது. அதில் முதல்கட்டமாக ஒரு குழியில் முன்னோர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்கள் அதாவது மண்பாண்டம் மூலமாக சமையல் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் ஆய்வாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த இடத்தில் தோண்டப்பட்ட மண் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.  இதன் மூலம் இங்குள்ள மண் படிவ காலத்தினை கொண்டு இங்குள்ள குடியிருப்பு வருடங்களை கணிக்க முடியும் என நம்பும் ஆய்வாளர்கள் இதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர்.

ஆதிச்சநல்லூரில் உள்ள ஆதித்தநங்கை கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூரில் ஆய்வு செய்யும் போது இவ்வூர் வழியாக தாமிரபரணி பல ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்னால் ஓடிய சுவடு தெரிய வருகிறது. எனவே ஆய்வு முடிவில் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகள் வெளிபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஆதிச்சநல்லூர் பரம்பு புளியங்குளம் பாண்டியராஜா கோயில் அருகே ஒரே குழியில் மூன்று முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. அதில் ஒரு தாழி மூடப்பட்ட நிலையில் சுமார் 4 அடியில் கிடைத்தது.

இந்த முதுமக்கள் தாழி 2004ல் ஆய்வு நடைபெற்ற போது கிடைத்த முதுமக்கள் தாழிகள் போலவே காணப்பட்டது. மேலும் அருகேயுள்ள முதுமக்கள் தாழி சிதைந்த நிலையில் இருந்தாலும் கூட அதில் எலும்பு கூடுகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அதை எடுத்து ஆய்வுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது. மேலும் ஒரு முதுமக்கள் தாழி மேலே கருப்பு கீழே சிவப்பு நிறத்திலும், மற்றொரு மூடி உடைந்த நிலையில் மிகப்பெரிய அளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 3வது முதுமக்கள் தாழி சுற்றி ஏராளமான சிறிய சிறிய அளவிலான கிண்ணங்கள், கிண்ண தாங்கிகள் மற்றும் சிறு சிறு பானைகளும் கிடைத்துள்ளன.

114 ஏக்கரில் ஆய்வு நடக்குமா?
 அகழாய்வு குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், ‘‘ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதும், ஏற்கனவே பராமரித்து வைத்திருக்கும் 114 ஏக்கருக்குள் செல்ல அனுமதி வழங்கவில்லை. இதனால் தொல்லியல் துறை வேலியிட்ட இடங்களுக்கு வெளியேதான் தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு பொருள்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே, வேலிக்குள் உள்ள 114 ஏக்கரையும் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஆதிச்சநல்லூரின் பழம்பெருமை உலகிற்கு நிரந்தரமாக வெளிப்படும்’ என்றார்.

Tags : elders ,Adichchanallur , Adichchanallur excavation, old age corridors
× RELATED எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான கல்வி...