×

வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வைக்கோல்: கட்டு ரூ.130க்கு விற்பனை

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கரில் கோடை சாகுபடி நடந்தது. இதில் 95 சதவீதம் கோடை சாகுபடி அறுவடை பணி முடிந்த நிலையில் தற்போது குறுவை பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். கோடை காலத்தில் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் விவசாயம் செய்ய முடியாததால் கால்நடைகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கோடை அறுவடை செய்த ஒரு வைக்கோல் கட்டு ரூ.130க்கு விலைக்கு வாங்கி செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் வயல் வரப்புகளில் புல் செடிகள், மாட்டுக்கு தேவையான உணவு கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதேபோல் நெற்பயிர் சாகுபடியும் பெருமளவு குறைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் 50 சதவீத மக்கள் தங்களுடைய மாடுகளை விற்பனை செய்து விட்டனர்.

இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் வைக்கோல் கட்டுகளை வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் கோவை , ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் காளாண் வளர்ப்புக்காக வைக்கோல் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். காளான் வளர்ப்புக்கு பிரதானமானது வைக்கோல். அதுவும் காவிரி டெல்டா பகுதி வைக்கோல் தரமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளில் பேப்பர் தயாரிக்கவும் வைக்கோல் கட்டுகளை வாங்கி செல்கின்றனர்.

கடந்தாண்டு ஒரத்தநாடு பகுதியில் ஒரு வைக்கோல் கட்டு ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது வைக்கோல் ஒரு கட்டு ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை லாரி மூலம் கொண்டு சென்று வெளிமாவட்டங்களில் ரூ.180க்கு விற்பனை செய்கின்றனர். கடந்தாண்டுகளில் வைக்கோல் கட்டு விலை குறைந்து இருந்ததால் அதிக லாபம் கிடைத்தது. ஆனால் இந்தாண்டு அதிக விலையால் லாபம் கிடைப்பது அரிதாகும் என சின்னசேலத்தை சேர்ந்த வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Rs , Outdoors, straw
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...