×

குறுவை சாகுபடிக்காக வயல்களில் இயற்கை உரம் தெளித்து தயார்படுத்தும் பணி மும்முரம்

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி முடிந்து குறுவை சாகுபடிக்கான பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒரத்தநாடு, பாப்பாநாடு, பருத்திக்கோட்டை, அன்னப்பன்பேட்டை, திருக்கருக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் மோட்டார் மூலம் நாற்றாங்கால் விதைகளை தெளித்த விதை நெல்மணிகள் முளைத்து நடவு பருவத்தில் காத்திருக்கின்றன. இந்நிலையில் மின்மோட்டார் மூலம் நடவு பணி செய்வதற்காக ஒரத்தநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இயற்கை உரமான மாட்டுச்சாணம், வைக்கோல், ஆட்டு கழிவுகளை வயல்களில் கொட்டி வைத்துள்ளனர். இதை நடவு செய்யும் சில நாட்களுக்கு முன் வயலுக்கு தண்ணீர் விடுவர்.

அதற்கு முன்பே வயலில் கொட்டி வைத்துள்ள இயற்கை உரமான சாணத்தை களைத்து விடுவர். அனைத்து இடங்களிலும் எருவை தெளித்து விடுவதால் அடியுரமாக செயல்பட்டு நெல் சாகுபடி விளைச்சல் அதிகரிக்கும். இயற்கை உரம் தெளித்து நடவு செய்வதால் ஏக்கருக்கு கூடுதலாக 5 மூட்டைகள் விளைச்சல் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலும் சில விவசாயிகள், அருகில் உள்ள மின்மோட்டார் தண்ணீர் பெற்று கொண்டு குறுவை நடவு பணியை துவங்கியுள்ளனர். பல விவசாயிகள் கடந்த மாதம் 12ம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டுள்ள நிலையில் ஆற்று நீரை நம்பி குறுவை நடவு பணியில் இறங்கியுள்ளனர்.

எனவே குறுவை சாகுபடிக்கு வயல்களை தயார்படுத்தி வரும் நிலையில் ஆற்றில் போதுமான அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fertilizer spraying , Kuruvai cultivation, natural fertilizer
× RELATED திருத்துறைப்பூண்டி பகுதியில்...